» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சுப்மன் கில், ஜடேஜா அசத்தல்: முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!
வெள்ளி 7, பிப்ரவரி 2025 8:25:46 AM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று பகல்-இரவு மோதலாக அரங்கேறியது.
இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு, முந்தைய நாள் பயிற்சியின் போது வலதுகால் முட்டியில் காயம் ஏற்பட்டதால் அவரால் இந்த ஆட்டத்தில் ஆட முடியவில்லை. அதனால் ஜெய்ஸ்வாலுக்கு அதிர்ஷ்டம் கிட்டியது. விக்கெட் கீப்பர் வாய்ப்பு ேலாகேஷ் ராகுலுக்கு வழங்கப்பட்டதால், ரிஷப் பண்ட் வெளியே உட்கார வைக்கப்பட்டார்.
‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து பில் சால்ட்டும், பென் டக்கெட்டும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக கால்பதித்தனர். தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். குறிப்பாக பில் சால்ட், புதுமுக வீரர் ஹர்ஷித் ராணாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர், இரு பவுண்டரி சாத்தினார். இதனால் ஸ்கோர் கிடுகிடுவென எகிறியது. இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த அந்த அணி 400-ஐ நோக்கி பயணிக்குமோ என்றே தோன்றியது.
இந்த சூழலில் தொடக்க ஜோடி எதிர்பாராதவிதமாக ரன்-அவுட்டில் பிரிய நேரிட்டது. அணியின் ஸ்கோர் 75-ஆக உயர்ந்த போது பில் சால்ட் (43 ரன், 26 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். அதுவும் 3-வது ரன்னுக்கு ஓடிய போது சால்ட் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்னர் ஹர்ஷித் ராணா, தனது ஒரே ஓவரில் பென் டக்கெட் (32 ரன்), ஹாரி புரூக் (0) ஆகியோருக்கு ‘செக்’ வைத்தார். அதன் பிறகு அவர்களின் ரன்வேகம் தளர்ந்தது.
4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும், கேப்டன் ஜோஸ் பட்லரும் இணைந்து வலுவாக காலூன்ற நிதானம் காட்டினர். ஆனால் ரூட்டை நிலைக்கவிடவில்லை. அவர் 19 ரன்னில் (31 பந்து) ஜடேஜாவின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.
இதன் பின்னர் ஜோஸ் பட்லரும், ஜேக்கப் பெத்தேலும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். இருப்பினும் முக்கியமான தருணத்தில் பட்லர் (52 ரன், 67 பந்து, 4 பவுண்டரி) அக்ஷர் பட்டேலின் பந்து வீச்சில் வீழ்ந்தார். அத்துடன் அவர்களின் ரன்ரேட் மறுபடியும் சுருங்கியது. பெத்தேல் தனது பங்குக்கு 51 ரன்கள் (64 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். கடைசி கட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் (21 ரன், 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) சற்று அதிரடி காட்டினார்.
முடிவில் இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஜடேஜா, ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து 249 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் களம் புகுந்தனர். வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் துல்லியமான தாக்குதலில் இருவரும் திண்டாடினர். ஜெய்ஸ்வால் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 2 ரன்னில் (7 பந்து) பெவிலியன் திரும்பினார். 19 ரன்னுக்குள் தொடக்க வீரர்கள் அடங்கியதால் இந்தியா கடும் நெருக்கடிக்குள்ளானது.
3-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லும், ஸ்ரேயாஸ் அய்யரும் கூட்டணி போட்டு அணியை சிக்கலில் இருந்து மீட்டனர். குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சரின் ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர் பறக்கவிட்டு நெருக்கடியை தணித்த ஸ்ரேயாஸ், பிரைடன் கார்ஸ் ஓவர்களில் தொடர்ச்சியாக பவுண்டரிகளை தெறிக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவரது அதிரடிஜாலம், ஆட்டம் இந்தியா பக்கம் திரும்ப உதவியது. 30 பந்துகளில் தனது 19-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
அணியின் ஸ்கோர் 113 ஆக உயர்ந்த போது ஸ்ரேயாஸ் அய்யர் 59 ரன்களில் (36 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். இதையடுத்து சுப்மன் கில்லுடன், ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் இணைந்து இவர்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். அக்ஷர் பட்டேல் அரைசதம் (52 ரன், 47 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி அசத்தினார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை நோக்கி முன்னேறிய சுப்மன் கில் துரதிர்ஷ்டவசமாக 87 ரன்களில் (96 பந்து, 14 பவுண்டரி) கேட்ச் ஆகிப்போனார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 2 ரன்னில் அடித் ரஷித்தின் சுழலில் சிக்கினார்.
இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்ட்யா (9 ரன்), ஜடேஜா (12 ரன்) களத்தில் இருந்தனர். சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை பெற்றார். வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 9-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’!
திங்கள் 10, மார்ச் 2025 9:02:16 AM (IST)

வருண் சக்ரவர்த்தி அச்சுறுத்தலாக இருப்பார்: நியூஸிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்
வெள்ளி 7, மார்ச் 2025 5:06:56 PM (IST)

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு!
வியாழன் 6, மார்ச் 2025 12:49:20 PM (IST)

வில்லியம்சன், ரவீந்திரா சதம்: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து!
வியாழன் 6, மார்ச் 2025 10:57:46 AM (IST)

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா
புதன் 5, மார்ச் 2025 8:39:22 AM (IST)

உலக செஸ் தரவரிசை பட்டியல் 3ம் இடம் பிடித்து குகேஷ் அசத்தல்: ஜூனியர் பிரிவில் முதலிடம்!
திங்கள் 3, மார்ச் 2025 12:37:08 PM (IST)
