» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்வதேச செஸ் போட்டி: குகேசை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 9:11:25 PM (IST)
டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டியில் இந்திய வீரர் குகேஷ் டைபிரேக்கரில் உலக சாம்பியன் குகேசை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
87-வது டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீயில் நடந்தது. இதில் 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 12-வது சுற்று முடிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர்களான சென்னையை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா தலா 8½ புள்ளிகளுடன் முதலிடம் வகித்தனர்.
இதன் 13-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதன் ஒரு ஆட்டத்தில் உலக சாம்பியன் குகேஷ் 32-வது காய் நகர்த்தலில் சக நாட்டு வீரர் அர்ஜூன் எரிகைசியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிறகு கிளாசிக்கல் ஆட்டத்தில் குகேஷ் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இதேபோல் கருப்பு நிற காய்களுடன் ஆடிய 19 வயதான பிரக்ஞானந்தா 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 80-வது நகர்த்தலில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரிடம் வீழ்ந்தார்.
14 வீரர்கள் இடையிலான இந்த போட்டி தொடரின் கடைசி சுற்று முடிவில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 8½ புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை நிர்ணயிக்க ‘டைபிரேக்கர்’ முறை கடைபிடிக்கப்பட்டது. காயை விரைவாக நகர்த்தும் ‘பிளிட்ஸ்’ முறையிலான இந்த ஆட்டத்தில் மோதிய இந்திய இளம் புயல்களான குகேஷ் - பிரக்ஞானந்தா தொடக்கம் முதலே நீயா, நானா என்று கடுமையாக மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதில் முதல் ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார். ஆனால் அடுத்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட பிரக்ஞானந்தா சரிவில் இருந்து மீண்டு வெற்றியை தனதாக்கி சமநிலையை உருவாக்கினார்.
இதனால் ஆட்டம் ‘சடன்டெத்’ முறைக்கு சென்றது. இதிலும் நெருக்கடியை சாதூர்யமாக சமாளித்து காய்களை நகர்த்திய பிரக்ஞானந்தா இறுதியில் 62-வது நகர்த்தலில் குகேசை மடக்கி வெற்றிக்கனியை பறித்தார். டைபிரேக்கர் முடிவில் பிரக்ஞானந்தா 2-1 என்ற கணக்கில் 18 வயதான குகேசை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தார்.
இதன் மூலம் 87 ஆண்டுகால இந்த போட்டி வரலாற்றில் விஸ்வநாதன் ஆனந்துக்கு (2003, 2004, 2006) பிறகு சாம்பியன் பட்டம் வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பிக் அப்துசட்டோரோவ் (8 புள்ளி) 3-வது இடம் பெற்றார்.
வெற்றிக்கு பிறகு பிரக்ஞானந்தா கூறுகையில், ‘இந்த மகிழ்ச்சியை எப்படி வெளிபடுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. நான் உண்மையிலேயே வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எப்படியோ குறிப்பிட்ட எல்லா விஷயங்களும் எனக்கு சாதகமாக அமைந்தன. வெற்றி பெற்ற இந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதேநேரத்தில் இது அதிக அழுத்தம் நிறைந்த நாளாகவும் இருந்தது. ஆட்டம் மிகவும் கடினமாக இருந்தது. வின்சென்டுக்கு எதிராக நான் விளையாடிய விதம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். நான் அதிகம் சோர்வடைந்து விட்டேன். தற்போது கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்’ என்றார்.
இதேபோல் இருபாலருக்கான சேலஞ்சர்ஸ் பிரிவில் செக்குடியரசு வீரர் தாய் டாய் வான் நுயேன் 9½ புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இந்திய வீராங்கனைகள் ஆர்.வைஷாலி (6 புள்ளி) 9-வது இடமும், திவ்யா தேஷ்முக் (3½ புள்ளி) 13-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.