» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை போட்டி பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும்: கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்

செவ்வாய் 19, நவம்பர் 2024 8:30:31 AM (IST)

சாம்பியன்ஸ் கோப்பை போட்டி பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று அதன் கிரிக்கெட் வாரியம் உறுதிப்பட கூறியிருக்கிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. 1996-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்கும் முதல் ஐ.சி.சி. தொடர் இதுவாகும்.

2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத இந்திய அணி, இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய இந்திய கிரிக்கெட் வாரியம் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதே நிலைமை ஏற்பட்ட போது, இந்திய அணியின் ஆட்டங்கள் இலங்கைக்கு மாற்றப்பட்டது.

ஆனால் இந்திய அணியின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. இந்திய அணி வராவிட்டால் ஐ.சி.சி. மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இன்னொரு பக்கம் போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி நேற்று லாகூரில் நிருபர்களிடம் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று இந்தியா மறுத்தது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுதி உள்ளோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். விளையாட்டையும், அரசியலையும் தனித்தனியாக பார்க்க வேண்டும். எந்த நாடும் அவற்றை ஒன்றாக கலக்கக்கூடாது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் விஷயத்தில் எல்லாமே சரியாக நடக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

மேலும் நக்வி கூறுகையில், ‘எங்களை பொறுத்தவரை பாகிஸ்தானின் கவுரவமும், மதிப்பும் மிகவும் முக்கியம். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும். அவற்றில் ஒரு பகுதி ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ளமாட்டோம். இந்த போட்டிக்கு தகுதி பெற்ற மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு வர தயாராக உள்ளன. அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே இந்திய அணிக்கு இங்கு வந்து விளையாடுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால், அவர்கள் எங்களிடம் பேசட்டும். அவர்களின் கவலையை எங்களால் எளிதில் தீர்க்க முடியும். அவர்கள் இங்கு வராததற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.

எனவே போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுவதில்லை என்ற எங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூடிய சீக்கிரம் போட்டி அட்டவணையை வெளியிடும்’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory