» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரோகித், விராட் இன்னும் நிறைய சாதிக்க விரும்புகிறார்கள்: கவுதம் கம்பீர்
திங்கள் 11, நவம்பர் 2024 12:00:06 PM (IST)
ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக நிறைய சாதித்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார் .
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கிடையே, சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வியால் இந்திய அணியையும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது; முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. ஒருவேளை ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினால் அணியை பும்ரா வழிநடத்துவார். ரோகித் சர்மாவுக்கு மாற்று தொடக்க ஆட்டக்காரராக அபிமன்யு ஈஸ்வரன் அல்லது கே.எல்.ராகுல் விளையாடுவார்.
மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக நிறைய சாதித்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதிக உத்வேகத்துடன் இருக்கின்றனர். கடினமாக உழைக்கின்றனர். இருவரும் இந்த தொடரில் மீண்டெழுவார்கள்.
நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியால் சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்கள் என்னை பாதிக்காது. சமூக ஊடகங்கள் யாருடைய வாழ்க்கையிலும் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்திய அணிக்கு பயிற்சியளிப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இது மிகவும் கடினமான, அதேநேரம் மிகவும் மதிப்புமிக்க வேலை என எனக்கு தெரியும். ஆஸ்திரேலிய தொடருக்கு முழுமையாக தயாராகி, முழுமையாக கைப்பற்ற முயற்சிப்போம்" இவ்வாறு அவர் கூறினார்.