» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாதி, மதமற்றவர் சான்றிதழ் கோரி பார்த்திபன் வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:12:06 PM (IST)

சாதி, மதமற்றவர் எனக் குறிப்பிடும் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கும் வகையில் அரசாணை அல்லது சுற்றறிக்கை பிறப்பிக்கக் கோரி நடிகர் ஆர். பார்த்திபன் தாக்கல் செய்த பொதுநல மனு மீது 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: "நான் சாதி, மதமற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து உழைத்து வருகிறேன். எனது திரைப்படங்களிலும் இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன்.

இந்த நிலையில், நான் சாதி, மதமற்றவன் என்ற சான்றிதழ் கேட்டு வட்டாட்சியரிடம் (தாசில்தார்) விண்ணப்பித்த போது வழங்கப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே அந்த சான்றிதழைப் பெற்றேன்.

கடந்த 2025-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சாதி மற்றும் மதம் அற்றவர் எனச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் மனுக்களைப் பரிசீலிக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தகுந்த உத்தரவு அல்லது அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், இதுவரை அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை."

எனவே, சாதி மற்றும் மதம் அற்றவர் என்ற சான்றிதழ் கேட்பவர்களுக்குத் தாமதமின்றி உடனடியாகச் சான்றிதழ் வழங்கும் வகையில், உரிய சட்டம், அரசாணை அல்லது சுற்றறிக்கையைப் பிறப்பிக்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நடவடிக்கை:

இம்மனு, தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory