» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைக்க முயற்சி: தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
சனி 18, ஜூலை 2026 5:46:54 PM (IST)

"பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைத்துவிடலாம் என்ற மமதை எண்ணம், ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள்ளேயே தவெக முதல்வருக்கு வந்துவிட்டது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ’ என்று உயிரின் மேன்மையைச் சொல்வார்கள். தமிழகத்தையே தலைகீழாகப் புரட்டிவிடுவோம் என்று கூறி, ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்திய நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது என்று பெருமூச்சு விட்ட மக்களுக்கு, அதன் தொடர்ச்சியாக ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று தற்போதைய தவெக ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.
‘மாற்றம் கொண்டு வருவோம்’ என்று சொல்லி ஆட்சி அமைத்த இந்தத் தவெக அரசில், அடாவடித்தனங்கள் நிகழாது என்று மக்கள் நம்பினார்கள். ‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்பது போல், கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து மக்கள் விடுபட்டிருந்தாலும், தற்போது மற்றொரு ‘துஷ்ட சக்தி’ ஆட்சியாளர்களின் கையில் சிக்கித் தவிக்கிறார்கள். ‘யானையின் பிடியிலிருந்து தப்பி, முதலையின் வாய்க்குள் விழுந்தது போல்’ அப்பாவி மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவரைச் சிறைக் காவலர்கள் கொடுமைப்படுத்திக் கொலை செய்ததாகக் கூறி, அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த அரசின் அமைச்சர்கள் சிலர் நேரில் சென்று, அந்தக் குடும்பத்தினரை விலைபேசிச் சமாதானப்படுத்த முயன்று தோற்றிருக்கிறார்கள். அமைச்சர்கள் தருவதாகக் கூறிய நிவாரண நிதியையும், உதவியையும் அவர்கள் பெற மறுத்ததாகச் செய்திகள் வருகின்றன.
இதேபோல், சென்னை புழல் சிறையிலும் விசாரணைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அவரது உறவினர்களும் நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், அவர்களிடமும் இந்த ஆட்சியாளர்கள் விலைபேசி வருகிறார்கள்.
விலைமதிப்பற்ற உயிர்களுக்குப் பணத்தை வாரி இறைத்து, அப்பாவிகளின் வாயை அடைத்துவிடலாம் என்ற மமதை எண்ணம் ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள்ளேயே ஒரு முதல்வருக்கு வந்துள்ளது மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தன்னைப் பார்க்க வந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலை கொடுத்துவிட்டாலே, அந்தக் குடும்பங்கள் ஜென்ம சாபல்யம் அடைந்துவிடும் என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் மிதக்கிறார்கள். லாக்-அப் மரணங்களும், சிறைச்சாலை மரணங்களும், தேவையற்ற என்கவுன்டர்களும் தொடர்ந்து வரும் நிலையில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட அதிகாரம் மிக்கவர்களைக் காக்க முயற்சிக்காமல், இவற்றைத் தடுக்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
‘கோடிகளில் பணம் பெற்றோம், கொடுத்த கால்ஷீட் படி நடித்துக் கொடுத்தோம், படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று உச்சத்தைத் தொட்ட நடிகர் ஒருவர், உச்சாணிக் கொம்பில் அமர்ந்துகொண்டு கொக்கரிப்பது போல் அல்ல ஆட்சி நடத்தும் முறை’ என்பதைத் தவெக முதல்வர் உணர வேண்டும்.
மாற்றத்தை வேண்டித் தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சைக் கேட்டு வாக்களித்த மக்களுக்கு, மாற்றத்தைத் தராவிட்டாலும் ஏமாற்றத்தைத் தராத வகையில் ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும் என்று இந்தத் தவெக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
சனி 18, ஜூலை 2026 5:39:54 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

காளியம்மன் கோயில் கொடை விழா மாட்டு வண்டி பந்தயம் : 52 ஜோடி மாடுகள் பங்கேற்பு!
சனி 18, ஜூலை 2026 12:11:57 PM (IST)

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 18, ஜூலை 2026 11:39:35 AM (IST)

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ஞானசவுந்தரி த.வெ.க-விலிருந்து நீக்கம்!
சனி 18, ஜூலை 2026 11:29:22 AM (IST)

தமிழக வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.82 லட்சம் பறிமுதல்
சனி 18, ஜூலை 2026 10:42:22 AM (IST)


