» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க ₹180 கோடியில் சதித்திட்டம்: செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

சனி 4, ஜூலை 2026 5:41:06 PM (IST)

SenthilBalajiBrother.jpg

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க, சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நடைபெற்று வரும் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க, அக்கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் தி.மு.க. தரப்பில் பேரம் பேசப்பட்டதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அண்மையில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், த.வெ.க. அரசை கவிழ்க்க தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஐ.பி.டி.எஸ். தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவன நிறுவனர் திருநாவுக்கரசு, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான மேடவாக்கம் தியாகராஜன், பெசன்ட்நகர் நரேஷ், கரூர் ரமேஷ், கார்த்தி, பள்ளிக்கரணை செல்வன், மணப்பாக்கம் அ.தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் மற்றும் அஸ்தினாபுரம் ராஜேஷ் ஆகிய 8 பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக அக்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க மொத்தம் ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகப் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த சதித்திட்டம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்குச் சென்னை போலீசார் இன்று கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டில் சம்மன் அளித்தனர். இந்த சம்மனை செந்தில் பாலாஜியின் தந்தை பெற்றுக்கொண்டார். வரும் திங்கட்கிழமை (ஜூலை 6) நேரில் ஆஜராகுமாறு அந்த சம்மனில் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஆட்சிக் கவிழ்ப்புப் பேரம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் தற்போது தலைமறைவாக உள்ளதாகத் திருவல்லிக்கேணி போலீசார் அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களைப் பிடிக்கப் போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory