» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வளர்ப்பு நாயைத் துரத்தி வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை கதவைப் பூட்டிச் சிறைபிடிப்பு: கூடலூரில் பரபரப்பு!

வெள்ளி 26, ஜூன் 2026 8:47:26 AM (IST)



கூடலூர் அருகே வளர்ப்பு நாயை வேட்டையாட வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையைத் தொழிலாளி ஒருவர் கதவை பூட்டிச் சிறைபிடித்தார். பின்னர் நள்ளிரவில் வனத்துறையினர் கூண்டு வைத்து அச்சிறுத்தையைப் பிடித்து வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட மாயாறு செல்வப்பா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், தொழிலாளி. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் வீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது வெளியில் இருந்த இவரது வளர்ப்பு நாயைச் சிறுத்தை ஒன்று வேட்டையாடத் துரத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்த நாய் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சிவக்குமாரின் வீட்டிற்குள் ஓடிவந்தது.

நாயைத் துரத்திக்கொண்டு சிறுத்தையும் வேகமாகக் கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து, நாயின் கழுத்தைக் கடித்துக் குதறியது. பக்கத்து அறையிலிருந்த சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது, வீட்டிற்குள் சிறுத்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அனைவரும் பாதுகாப்பாக வீட்டை விட்டு வெளியேறினர். தொடர்ந்து சிவக்குமார் சமயோசிதமாகச் செயல்பட்டு வீட்டின் வெளிக்கதவை வெளிப்புறமாகப் பூட்டினார்.

வீட்டிற்குள் சிக்கிக் கொண்டதை உணர்ந்த சிறுத்தை, சிவக்குமார் குடும்பத்தினரின் சத்தத்தைக் கேட்டு நாயை விடுவித்தது. மேலும் பயத்தின் காரணமாக அறையிலிருந்த கட்டிலுக்கு அடியில் சென்று பதுங்கிக் கொண்டது. இத்தகவல் பரவியதும் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

தகவலறிந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சிறுத்தை மிகவும் ஆக்ரோஷமாகக் காணப்பட்டது. ஆரம்பத்தில் கதவைத் திறந்துவிட்டால் சிறுத்தை தானாகவே காடுகளுக்குள் சென்றுவிடும் என்று வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால், இதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரும்பு கூண்டு வைத்துச் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் இரும்பு கூண்டைக் கொண்டு வந்து வீட்டின் வாசலில் வைத்தனர். கூண்டின் உள்ளே இரை வைக்கப்பட்டு வீட்டின் கதவு திறக்கப்பட்டது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, நேற்று அதிகாலை 2:30 மணிக்கு வீட்டிற்குள் இருந்த சிறுத்தை வெளியே வந்து கூண்டுக்குள் சிக்கியது.

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையைச் சீகூர் வனப்பகுதிக்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தனர். சிறுத்தை கடித்த வளர்ப்பு நாய் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory