» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக ஆட்சிக்கால 500 மின்சார பஸ் டெண்டர் ரத்து: தவெக அரசு அதிரடி நடவடிக்கை!

புதன் 24, ஜூன் 2026 12:50:47 PM (IST)

முந்தைய திமுக ஆட்சியில் ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் 500 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்யக் கோரப்பட்ட டெண்டர் நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதனைத் தவெக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, முந்தைய திமுக ஆட்சியில் கோரப்பட்ட பல்வேறு துறைகளின் டெண்டர்களை ஆய்வு செய்து, அதில் முறேகடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அவற்றை ரத்து செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இதுவரை பல்வேறு துறைகளின் 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, முந்தைய ஆட்சியில் ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் 500 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டர் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தெண்டர்கள் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடியவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கும், நடத்துநர்களை (கண்டக்டர்) நியமிப்பதற்கும், பராமரிப்புச் செலவுகளை ஏற்பதற்கும் போதிய நிதி இல்லாததால், ஒப்பந்தம் பெறும் தனியார் நிறுவனங்களே பேருந்துகளை வாங்கி, இயக்கி, பராமரிக்கும் வகையில் ஒப்பந்தத்தை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. 

இதன்படி, தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஒரு கிலோமீட்டருக்கு நிலையான கட்டணத்தை மட்டுமே செலுத்தும். இது குறித்துத் தனியார் நிறுவனங்களின் ஒப்புதலைக் கோரிக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த வாரம், முந்தைய ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் பல்வேறு கோவில்களில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக அனுமதிகளைத் தவெக அரசு ரத்து செய்தது. நீதிமன்றத் தடையாணைகள் மற்றும் கோவில்களின் நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory