» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக ஜென்-சி ஒருங்கிணைப்பாளரை நள்ளிரவில் கைது செய்ய முயற்சி: உதயநிதி, கனிமொழி கண்டனம்!

புதன் 24, ஜூன் 2026 12:08:59 PM (IST)

முதலமைச்சர் விஜய் குறித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், திமுகவின் 'GenZ' குழு ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை நள்ளிரவில் போலீசார் கைது செய்ய முயன்ற சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் வசித்து வரும் திமுகவின் 'GenZ' குழு ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பன், முதலமைச்சர் விஜய்யின் மகன் தனது தந்தையைக் தேடுவது போலவும், அவர் நடிகையுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்தார் என்பது போலவும் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இவ்வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் அன்பானந்தன் அரியப்பனின் வீட்டுக்குள் நுழைந்த போலீசார் அவரைத் தேடினர். இதனால் அங்கிருந்த திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்யாமல் திரும்பச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி தொகுதி திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களை எதிர்த்துக் கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கும் தவெக அரசுக்கு, விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே உரிய பதிலடி கொடுப்பார்கள் என்றும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ய முயன்ற காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக சட்டத்துறையினருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இவழக்கைச் சட்டரீதியாகக் கழகம் முறைப்படி எதிர்கொள்ளும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது அதே கட்சியின் பெண் கொடுத்த பாலியல் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத விஜய் அரசு, கேள்வி கேட்கும் இளைஞர்களை ஒடுக்க நினைப்பதாகத் திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

உதயநிதி கண்டனம்!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கழகத்தின் GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.

கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?

நிர்வாகத்திறனற்ற SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.

கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory