» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் : 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு

புதன் 10, ஜூன் 2026 11:42:13 AM (IST)



தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உலகத் தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கோடு, தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்த 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தில் முதற்கட்டமாக ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதோடு, 2,500 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வர் விஜய் கையெழுத்திட்ட முதல் மூன்று முக்கியக் கோப்புகளில், 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் பிரம்மாண்ட தொடக்க விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மிக எழுச்சியுடன் நடைபெற்றது.

விழாவில் முதல்வர் விஜய், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைத்து, அப்படையின் அதிநவீன ரோந்து வாகனங்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும், பெண்களின் பாதுகாப்பிற்குத் துணையாக நிற்கும் வகையில், ஒரு ரோந்து வாகனத்தை அவரே நேரியலாக ஓட்டிச் சென்று விழாவில் இருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.

விழாவில் முதல்வர் விஜய் ஆற்றிய எழுச்சி உரை வருமாறு: "நம்முடைய பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று நாங்கள் கூறியது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல; அது எங்களது உணர்வுப்பூர்வமான கொள்கை. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கும் பட்சத்தில், எங்களது அரசின் நிலைப்பாடு எப்போதும் 'ஜீரோ டாலரன்ஸ்' (Zero Tolerance) மட்டும்தான்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்குத் தொடங்குகின்றன என்று விரிவாக ஆய்வு செய்து பார்த்தபோது, அது போதைப்பொருள் நடமாட்டம் என்ற ஒரே புள்ளியில்தான் வந்து நிற்கிறது. இந்த போதைப்பொருள் நடமாட்டத்தை நாம் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். பல ஆண்டுகளாக இப்பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவாக, இதன் வேர்கள் இன்று ஆழமாகப் பரவியுள்ளன.

பெண்கள் படிக்கும் இடங்கள், வேலை செய்யும் இடங்கள் மற்றும் அன்றாடப் பயணங்களின் போது எவ்வித பயமுமின்றி மரியாதையோடு வாழும் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். பெண்களுக்குத் தொந்தரவு கொடுப்பது யாராக இருந்தாலும் அதை எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ள முடியாது. அவர்கள் மீதான நடவடிக்கைகள் காவல் துறையின் மூலம் மிகக் கடுமையாக இருக்கும்.

குற்றப்பத்திரிகை மிக விரைவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதேநேரம், இந்த அதிரடி நடவடிக்கைகளின் போது எந்தவொரு நிரபராதியும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிகாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பு என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்தது மட்டுமல்ல; அதில் சமூக ஒழுங்கும், தனிமனித ஒழுங்கும் சம்பந்தப்பட்டுள்ளது. தனிமனிதன் ஒழுக்கமாக இருந்தாலே சமூகம் தானாக மாறும்."    இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக முதற்கட்டமாக ரூ.354 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இப்படைக்கென பிரத்தியேகமாக 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முன்பாகவே அதனைத் தடுத்து நிறுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இப்படை தீவிரமாக ஈடுபடும்.

இதன் மூலம், அனைத்து மகளிர் காவல் எல்லைகளில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளிலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தருவதிலும் வழக்கமான போலீசார் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த முடியும். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க இந்தியாவிலேயே முதல்முறையாக 'டிரோன் (Drone) ரோந்து முறை' இத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முன்னதாக, சட்டம் ஒழுங்கு தலைமைப் பொறுப்பு அதிகாரி டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், முதல்வர் விஜய்க்குச் சிறப்பு நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் தலைமைச் செயலர் மு.சாய் குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உட்படப் பல உயர்தர அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory