» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு : ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றச்சாட்டு!

ஞாயிறு 31, மே 2026 9:01:43 AM (IST)

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு நேற்று சனிக்கிழமை வந்த அவர், வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: அனைவரும் தங்களது மதத்தைப் பின்பற்றுவதற்கான முழு உரிமையையும் நமது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகையின் போது பெரும்பாலும் ஆடுகள் மட்டுமே பலியிடப்படுகின்றன.

இந்நிலையில், பக்ரீத் திருநாளையொட்டி மாடுகள் வெட்டத் தடை விதித்து நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இத்தீர்ப்பு முற்றிலும் பாரபட்சமானது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்தமாகக் குற்றச் சம்பவங்கள், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் பெருமளவில் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கைப் சீர்படுத்த இதுதொடர்பாக அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

"தேர்தல் முடிந்து வாக்காளர்களின் கையில் வைக்கப்பட்ட அடையாள மை கூட இன்னும் அழிவதற்கு முன்பே, தங்களுக்கு எதிரணியில் போட்டியிட்டவர்களை ஆட்சியில் உள்ளவர்கள் தங்களது கட்சியில் சேர்த்துக் கொள்வது அப்பட்டமான ஜனநாயக நெறிக்கு எதிரானது. 'இதுதான் அவர்கள் சொன்ன மாற்றமா?' எனப் பொதுமக்கள் தற்போது கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

"தமிழகத்தின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் காவிரி நீருடன் நேரடியாகத் தொடர்புடையது. கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி, மேக்கேதாட்டுவில் அணை கட்ட தீவிரமாக முயல்வது தமிழக மக்களின் உரிமைக்கு எதிரானது. தற்போதைய தவெக ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளதால், இந்த அணை விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் சாதிப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்." இவ்வாறு ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறினார். 

முன்னதாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் யூசுப் தலைமையில் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory