» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய படங்கள் வெளியாகும் முதல் வாரம் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! – முதல்வர் விஜய் உத்தரவு!

செவ்வாய் 26, மே 2026 4:16:05 PM (IST)

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிட அனுமதியளித்து தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை 16.5.2026 அன்று திரைப்படத் துறையினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஜந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர். 

1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் 'C' படிவ உரிம நிபந்தனை 14-A-இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி, அதாவது நாளொன்றுக்கு ஜந்து காட்சிகள், மாவட்டத்தைப் பொறுத்தளவில் உரிமம் வழங்கும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகரத்தைப் பொறுத்தளவில் மாநகர காவல் ஆணையரால் அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், புதிய திரைப்படம் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் மற்றும் உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் அரசு மற்றும் உரிமம் வழங்கும் அலுவலரின் அனுமதி தனியாக பெறத் தேவையில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory