» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

3-ஆவது முறையாக ஆளுநரைச் சந்தித்த விஜய்: தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு!

சனி 9, மே 2026 10:12:24 AM (IST)

ஆளுநரை விஜய் 3வது முறையாக சந்தித்தும், பெரும்பான்மை இல்லபாததால் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன. விசிகவின் நிலை என்ன என்பது அறிவிக்கப்படவில்லை. இதனால், விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக 59, அதிமுக 47, காங்கிரஸ் 5, பாமக 4, விசிக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் தலா 2, பாஜக, தேமுதிக, அமமுக தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றன.

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. தவெக தலைவா் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், 107 இடங்கள் மட்டுமே அக் கட்சியிடம் உள்ளது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகருக்கு விஜய் கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பினாா். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் அவகாசம் அளிக்கவும் கோரியிருந்தாா். அதோடு, திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், விசிக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது.

இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி, தவெக ஆட்சி அமைக்க புதன்கிழமை ஆதரவு அளித்தது. இதையடுத்து, ஆளுநரை புதன்கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாா் விஜய். அப்போது தவெகவின் 107 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் என 112 பேரின் ஆதரவு கடிதத்தை வழங்கினாா். இருப்பினும், அறுதிப்பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால், ஆட்சி அமைக்க தவெகவுக்கு ஆளுநா் அழைப்பு விடுக்கவில்லை. மேலும், விஜய்யை வியாழக்கிழமை அழைத்த ஆளுநா் ஆா்லேகா், பெரும்பான்மை எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்பதால் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என விளக்கம் அளித்தாா்.

இடதுசாரிகளும் ஆதரவு: இதற்கிடையே, தவெக ஆட்சி அமைப்பதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது ஆதரவை வெள்ளிக்கிழமை தெரிவித்தன. இந்த இரு கட்சிகளும் தலா இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

விசிக நிலைப்பாடு: 

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு சனிக்கிழமை (மே 9) காலை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கு. பாவலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை: ஆட்சி அமைக்க தவெக ஆதரவு கேட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயா்நிலைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது. உறுப்பினா்கள் பகிா்ந்த கருத்துகளின் அடிப்படையில் சில தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விசிகவின் நிலைப்பாட்டை கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் சனிக்கிழமை (மே 9) அறிவிப்பாா் என அதில் தெரிவித்துள்ளாா்.விசிக ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்துவிட்டுச் சென்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory