» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டத்தைக் கையில் எடுத்த உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை: சரத்குமார் வலியுறுத்தல்!

புதன் 8, ஏப்ரல் 2026 4:56:41 PM (IST)

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சட்டத்தைக் கையில் எடுத்த உதவி ஆய்வாளர் இசக்கிமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் "சாத்தான்குளத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தந்தை - மகன் (ஜெயராஜ் - பென்னிக்ஸ்) கொலையில் கொடூரமாகச் செயல்பட்ட ஒன்பது காவலர்களுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருந்தது. இந்தத் தீர்ப்பை நானும் பாதிக்கப்பட்ட மக்களும் வரவேற்று, நீதியின் மீது நம்பிக்கை பெற்றிருந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே, மீண்டும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புதூரில் கள் இறக்கியதாகக் கூறி, காவல் உதவி ஆய்வாளர் இசக்கிமுத்து என்பவர் பனைத் தொழிலாளி மணிகண்டன் குடும்பத்தாரை விசாரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, மணிகண்டன் மீது அடுத்தடுத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவரது காலில் இருமுறை குண்டுகள் பாய்ந்துள்ளன. ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்ட இந்த வெறித்தனமான செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எந்தவித முன்னறிவிப்புமின்றி, உதவி ஆய்வாளர் இசக்கிமுத்து நேரடியாகத் துப்பாக்கியைப் பயன்படுத்தியது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. அவர் சட்டப்படி தவறு செய்திருந்தால், தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். மாறாக, சட்டத்தைத் தன் கையில் எடுத்துத் துப்பாக்கிச் சூடு நடத்துவது மனிதாபிமானமற்ற மற்றும் மனித உரிமை மீறிய செயலாகும்.

எனவே, காவல்துறை உயர் அதிகாரிகளும், தேர்தல் ஆணையமும் உடனடியாக இச்சம்பவத்தில் கவனம் செலுத்தி, உரிய விசாரணை மூலம் உதவி ஆய்வாளர் இசக்கிமுத்து மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மக்களைப் பாதுகாக்கும் பணி என்பது மிகவும் உன்னதமானது. அந்தப் பணியில் இருப்பவர்கள் சாதி, மத, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட வேண்டும். அவ்வாறின்றி மனித உரிமைகளை மீறும் எண்ணம் கொண்ட காவலர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் எதேச்சதிகாரமான தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory