» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நான் ஆட்சிக்கு வந்தால் மெரினா நினைவிடங்களை அகற்றுவேன்: சீமான் ஆவேசப் பேச்சு

திங்கள் 6, ஏப்ரல் 2026 5:25:10 PM (IST)



நான் ஆட்சிக்கு வந்தால் மெரினாவில் உள்ள நினைவிடங்களை அகற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வெவ்வேறு என்று நினைப்பது மிகப்பெரிய அறியாமை. இவை இரண்டும் ஒரே கொள்கையைக் கொண்ட கட்சிகள் தான். காங்கிரஸ் - பாஜக, திமுக - அதிமுக என எந்தக் கட்சியாக இருந்தாலும், அவர்களின் கொடியில் உள்ள வண்ணங்கள் வேண்டுமானால் மாறலாம்; ஆனால், அவர்களின் எண்ணமும் கொள்கையும் மாறுவதில்லை. இவர்கள் இலவசங்களைக் கொடுத்து மக்களின் ஆசையைத் தூண்டி ஏமாற்றி வருகின்றனர்.

"கள்ளச் சாராயம் குடித்து இறப்பவர்களுக்கும், நெரிசலில் சிக்கி உயிரிழப்பவர்களுக்கும் தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கும் இந்த அரசு, எல்லையில் நாட்டைக் காக்க உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு உரிய மதிப்பளிப்பதில்லை. இதுதான் நல்ல நாடா?" என அவர் கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரியின் அரசியல் நிலை குறித்துப் பேசிய அவர்: "காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் புதுச்சேரியை நீண்ட காலம் ஆட்சி செய்தும், இந்த மண்ணிற்குரிய மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தரவில்லை. கேரளாவில் மாஹே, ஆந்திராவில் ஏனாம் எனத் தொகுதிகளை வைத்துள்ளீர்கள். ஆனால், அந்த மண் சார்ந்தவர்கள் மட்டுமே அங்கு நிற்க முடிகிறது. மாநில உரிமையைக் கேட்காத ரங்கசாமி, இப்போது தேர்தல் நெருங்கியதும் அதைப் பற்றிப் பேசுகிறார்."

நதி நீர் பகிர்வில் தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் உரிய பங்கைப் பெற்றுத் தராத பாஜகவிற்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும்?" மாநிலங்கள் கொடுக்கும் வரி வருவாயை வைத்துக்கொண்டு, 'எங்களுக்கு உடன்பட்டால் தான் நிதி தருவோம்' என்பது கொடுங்கோல் ஆட்சி. வருமான வரித்துறை சோதனைகள் மூலம் பாஜக பேரம் பேசி பணம் வாங்குகிறது. இதில் எங்கே இருக்கிறது வெளிப்படையான நிர்வாகம்?" என்று சாடினார்.

காமராஜருக்கு மெரினாவில் இடம் ஒதுக்காதது குறித்த எடப்பாடி பழனிசாமியின் கருத்திற்குப் பதிலளித்த அவர்: "அது வெறும் குற்றச்சாட்டு அல்ல, வரலாற்று உண்மை. கடற்கரையை ஆக்கிரமித்து 300 கோடி ரூபாயில் 8 ஏக்கரில் நினைவிடங்கள் கட்டுவதற்கு நீங்கள் ஒன்றும் பெரிய சாதனைகளைச் செய்துவிடவில்லை. நாட்டின் முதல்வர்களின் கல்லறைகள் அனைத்தும் கடற்கரையிலா இருக்கின்றன? நான் ஆட்சிக்கு வந்தால் அந்த நினைவிடங்களை அகற்றுவேன்" என ஆவேசமாகத் தெரிவித்தார்.

"புதுச்சேரியைச் சிங்கப்பூராக மாற்றுவேன் என்று கூறும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போன்றவர்கள், ஏற்கனவே உள்ள 'திருடர்களுடன்' (கூட்டணி) சேர்ந்தால் அவர்களால்தான் ஒழிக்கப்படுவார்களே தவிர, திருட்டை ஒழிக்க முடியாது. நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன். தனித்து நின்று என் தத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்" என்று கூறித் தனது உரையை முடித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory