» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தலில் மநீம போட்டியிடாது! திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு - கமல்ஹாசன் அறிவிப்பு

புதன் 25, மார்ச் 2026 3:47:20 PM (IST)

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட உடன்பாடின்மை மற்றும் கட்சியின் அடையாளமான 'பேட்டரி டார்ச்' சின்னத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.

திமுக தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து கமல்ஹாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: திமுக தரப்பில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும், 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் எனக்கும் என் தொண்டர்களுக்கும் ஏற்புடையதாக இல்லை. 'பேட்டரி டார்ச்' என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல, அது எங்களின் அடையாளம். ஒன்பது ஆண்டுகளாக என்னோடு பயணிக்கும் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது."

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் மதவாத சக்திகளைத் தடுப்பதே முதன்மையானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், "தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படும் சூழலில், 'எங்களுக்கு இத்தனை இடங்கள் வேண்டும்' என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்க முடியாது. இது தியாகம் அல்ல, கடமை. தேர்தல் அரசியலில் ஒரு புதிய நாகரிகத்தின் விதையை நான் விதைத்துள்ளேன்," என்று தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணிக்கு ஆதரவு ஏன்?

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு 'திராவிட மாடல் 2.0' அரசு அமைவது அவசியம் என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளைப் பாதுகாக்கும் நோக்கில் திமுக கூட்டணி வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொண்டர்களுக்கு நெகிழ்ச்சி மடல்

சுயநலமற்ற அரசியலுக்குத் தனது தொண்டர்களே முன்னுதாரணம் என்று பாராட்டியுள்ள அவர், தேர்தல் என்பது அரசியலின் ஒரு பகுதிதான் என்றும், மக்களுக்கான போராட்டம் என்றும் தொடரும் என்றும் கூறியுள்ளார். மேலும், "விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பதவியேற்பு விழாவில் அவரை சந்திப்போம்" என்ற நம்பிக்கையோடு தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory