» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் முழுமையாக அமல்: தமிழக அரசு

சனி 24, ஜனவரி 2026 5:49:07 PM (IST)

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

தமிழகத்ததில் சுற்றுலா மலைப்பகுதிகளில் மதுபான பாட்டில்கள் வீசப்படுவதைத் தடுக்க ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்து, பின்னர் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது 10 ரூபாயை திருப்பி அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு, சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. இத்திட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மூன்று மாவட்டங்களில் பாதி அளவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார்.

மேலும், ஏழு மாவட்டங்களில் இத்திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் நீதிமன்றம் உத்தரவிட்டபடி முழுமையாக இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இதேபோல் கியூ ஆர் கோடு முறையை அமல்படுத்த மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் ஜெ. ரவீந்திரன் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை ஆயிரம் கோடி என சாதனை படைப்பதாகவும் ஆனால் அமல்படுத்துவதில் என்ன பிரச்சனை? இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory