» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜனநாயகன் ரிலீஸ் மேலும் தாமதம்: தணிக்கை சான்றிதழ் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு!
புதன் 21, ஜனவரி 2026 8:28:12 AM (IST)

ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம், இந்த படத்தை மறுஆய்வு செய்ய பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, மறு ஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்து, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடையை பெற்றது.இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது, பதில் மனு தாக்கல் செய்யக்கூட தணிக்கை வாரியத்துக்கு தனி நீதிபதி அவகாசம் வழங்கவில்லை. மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து படக்குழு வழக்கு தொடராத நிலையில், மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்துள்ளார்.
படக்குழு கேட்காத பரிகாரத்தை தனி நீதிபதி கொடுத்து இருப்பது சட்டத்துக்கு புறம்பானது. படத்தை மறுஆய்வுக்கு அனுப்புவது என்பது இடைக்கால முடிவுதான். அது நிரந்தரமானதல்ல. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கும்படி ஆய்வுக்குழு பரிந்துரை செய்தது. ஆனால், தணிக்கை உறுப்பினர் அளித்த புகாரின் பேரில்தான் மறுஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் எந்த தவறும் இல்லை' என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன் ‘தணிக்கை குழு படத்தை பார்த்து சில காட்சிகளை நீக்கும்படி கூறியது. அந்த காட்சிகளை நீக்கிய பிறகு, நீக்கப்பட்ட காட்சிகளை சுட்டிக்காட்டி எப்படி புகார் அளிக்க முடியும்? படத்தை பார்த்த ஆலோசனைக்குழுவில் இடம் பெற்ற உறுப்பினர், தணிக்கை சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்யலாமே தவிர, சான்றிதழ் வழங்கக்கூடாது என புகார் அளிக்க முடியாது.
தணிக்கை சான்றிதழ் வழங்கும் இறுதி முடிவை தணிக்கை வாரியத் தலைவர் இன்னும் எடுக்காத நிலையில், மறுஆய்வுக்கு அனுப்பியதால்தான் இந்த வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி தீர்ப்பு வழங்கிய மறுநிமிடமே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. எங்களுக்கும், போதிய அவகாசம் வழங்கவில்லை. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாததால், தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தணிக்கை வாரியம் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. இங்கு மட்டுமல்ல பாலிவுட்டிலும் கூட ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டுத்தான் தணிக்கை சான்றிதழுக்கு செல்கின்றனர். இது வழக்கமான ஒன்றுதான்' என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘தணிக்கை சான்றிதழ் பெற்ற பின்பு தான் படத்தை வெளியிடும் தேதியை அறிவிக்க வேண்டும். மேலும், நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து ஒரே நாளில் தீர்வு கிடைக்க வேண்டும் என படத்தயாரிப்பு குழு எதிர்பார்ப்பதை ஏற்க முடியாது. இயற்கை நீதியை பின்பற்றித்தான் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியும்' என கருத்து தெரிவித்தனர். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் மனதில் முதல்வர் ஸ்டாலின்: திமுகவில் இணைந்தது குறித்து வைத்திலிங்கம் விளக்கம்!!
புதன் 21, ஜனவரி 2026 11:16:21 AM (IST)

நெல்லை அருகே கூட்டம், கூட்டமாக வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:03:08 PM (IST)

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது ஆளுநரின் கடமை: சபாநாயகர் அப்பாவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:53:55 PM (IST)

தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் : 600பேர் கைது
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:35:56 PM (IST)

சட்டசபையில் இருந்து வெளியேறியது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: ஸ்டாலின் கண்டனம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:25:01 PM (IST)

