» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்சியில் பொங்கல் விழா: தமிழர் பாரம்பரிய உடையில் அமித் ஷா பங்கேற்பு!

திங்கள் 5, ஜனவரி 2026 5:11:12 PM (IST)



திருச்சியில் நடைபெற்ற "நம்ம ஊர் மோடி பொங்கல் 2026" நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். 

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் தற்போது முதலே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி தொகுதி பங்கீடு வரை சென்றுவிட்டன.

அந்த வகையில் இந்த தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. வலுவான கூட்டணி அமைத்துள்ளது. தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்  பியூஷ் கோயல் தலைமையில் இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பலத்தை நிரூபிக்கும் வகையில் மத்திய அமைச்சர்  அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை திருச்சி வருகை தந்தார். புதுக்கோட்டையில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம் என்ற பிரசார பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தி.மு.க. அரசை கடுமையாக சாடிய துடன், அதனை வரும் தேர்தலில் அகற்றவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

பின்னர் இரவு திருச்சி வந்த அமித்ஷா, ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். முன்னதாக பா.ஜ.க. மத்தியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்தும் அவர் விவாதித்தார்.

இரவு அதே ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்த மத்திய அமைச்சர்  அமித்ஷா இன்று, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார். இதையடுத்து காலை 9.15 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்ட அவர் டி.வி.எஸ். டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை, பஞ்சக்கரை வழியாக முதலில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக திகழும் திருவானைக்காவல் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டார். பழமையான கோவில் பிரகாரங்களை வலம் வந்த அவருக்கு கோவில் புராண வரலாறு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட அமித்ஷா, பூலோக வைகுண்டாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்தார். தற்போது அங்க வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வரும் நிலையில் அமித்ஷாவுக்கு ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகே கோவில் நிர்வாகம் சார்பில் பட்டர்கள் மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

கோவிலுக்குள் சென்ற அவர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் வழிபட்டார். தொடர்ந்து மூலவரை மனமுருகி தரிசித்த பின்னர் தாயார் சன்னதியில் வழிபாடு நடத்தினார். அங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு நினைவுப்பரிசு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்ட அமித்ஷா திருச்சி மத்திய பேருந்து நிலையம், அரிஸ்டோ மேம்பாலம் வழியாக மன்னார்புரம் ராணுவ மைதானத்திற்கு வருகை தந்தார். அங்கு பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவில் அமித்ஷா கலந்துகொண்டார்.

பிரதமர் மோடி ஏர் கலைப்பையை தோளில் சுமந்தவாறு கூடிய சிறிய கட்அவுட்டுடன் பிரமாண்ட மேடை, சுமார் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த மைதானத்தில் பொங்கல் வைப்பதற்றாக 2 ஆயிரம் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டதுடன், 1,008 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.

முன்னதாக இன்று காலை முதலே விழா நடைபெற்ற மைதானத்தில் பாரம்பரியத்தை போற்றும் வகையில் பெண்கள் பட்டுச்சேலை அணிந்தும், ஆண்கள் பட்டுவேட்டி, சட்டை அணிந்தும் குடும்பத்துடன் திரண்டனர். அவர்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக செங்கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்  அமித்ஷாவும் பாரம்பரிய உடையான பட்டுவேட்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டார். பொங்கல் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory