» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.54.53 இலட்சம் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:54:23 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் ரூ.54.53 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி.கீதா ஜீவன் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி தருவை மைதானம் உள் விளையாட்டு அரங்கில் இன்று (16.12.2025) நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா 2025-ல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் கலந்துகொண்டு விழாப் பேரூரையாற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது :-தூத்துக்குடி மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி இன்றையதினம் நடைபெறுகிறது. டிசம்பர் 03 அன்று உலக மாற்றுத்திறனாளி தினமாக அனுசரிக்கப்படுகின்ற அன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் விழாவாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், மாற்றுத்திறனாளிகளை எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் நியமன உறுப்பினராக நியமனம் செய்வோம் என்று அறிவித்து, வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை இயற்றினார்கள். அதன்மூலம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், சில மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய மற்றும் மாவட்ட அமைப்புகளில் ஒருவர், நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அமைப்புகளில் பதவி ஏற்றுள்ளனர். நமது மாநகராட்சியில் ஆறுமுகம் என்பவர் நியமன கவுன்சிலராக பதவியேற்றுள்ளார்.
எல்லாரும் வைத்த இந்த கோரிக்கையினை, தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்று, கடந்த சட்டப்பேரவையில் அறிவித்து அதனை செயல்படுத்தியதைத் தொடர்ந்து, இவர் நியமன கவுன்சிலராக பொறுப்பேற்றுள்ளனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர். நமது மாநகராட்சியிலும் ஒரு மாற்றுத்திறனாளி பெண் கவுன்சிலராக இருக்கிறார்கள்.
இருந்தபோதிலும், வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவது போல், மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய வசதிகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்த மாற்றுத்திறனாளிகளால் தான் அவர்களுக்கான பிரச்சனைகளை அதிகமாக தீர்க்க கூடியதாக அமையும் என்ற நோக்கத்தில், பல திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வது போல், இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை இயற்றி நியமன கவுன்சிலர் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலம் பயக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிகாலத்தில் 2010 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி நலத்துறை என்று தனித் துறையாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு TN – Rights மூலம் ஒன்றிய மற்றும் கோட்ட அளவிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நமது மாநகராட்சியில் 14 நபர்கள் பணிபுரிகின்றனர். வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் யாரும் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றார்களா? மாற்றுத்திறனாளிகள் யாரும் உதவித்தொகை பெறாமல் இருக்கின்றார்களா? யாருக்கும் உதவி உபகரணங்கள் கிடைக்காமல் உள்ளார்களா? உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடத்தி வருகிறார்கள். வெளி உலகத்திற்கு வராத அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு திட்டங்கள் சென்று பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, TN – Rights மூலம் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.
திட்டங்களில் முத்தான திட்டம் வருவாய் துறை மூலம் பட்டா வழங்குவது ஆகும். மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளித்த விண்ணப்ப மனுவில் அடிப்படையில், கோவில்பட்டியில் ஒரே இடத்தில் அனைத்துதரப்பு மாற்றுத்திறனாளிகளுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதேப்போல் விளாத்திகுளத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதில் தற்பொழுது, மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் நிரந்தர கான்கீரிட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
அதேப்போல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிக்கின்ற மனுவில், பட்டா வழங்கப்பட்டு, கிராமங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இது பெரிய திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதாந்திர உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்தில் 214 நடமாட முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்கின்ற உதவியாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம், நடமாட முடியாத மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்கின்ற அவர்களுக்கும் இத்தொகை உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நவீன உலகத்திற்கேற்ற வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர், மோட்டார் சைக்கிள், பார்வை திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள், காது குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு லேப்டேப் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி நலனுக்காக நவீன கருவிகளையும், உபகரணங்களையும் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
அதேப்போல் புதிதாக கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்வுதளம் வசதி அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, அதனை செயல்படுத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு மட்டும் நமது தமிழ்நாடு அரசின் மூலம் சுமார் ரூ.1852 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக உங்கள் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் கேட்டு, அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு செயல்படுத்தக்கூடிய நமது தமிழ்நாடு முதலமைச்சர் நமது துறைக்கு கிடைத்திருப்பது நமக்கு பாக்கியம்! அவர் பொறுப்பேற்ற பொழுது ரூ.600 கோடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது ரூ.1800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது.
அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் ஏதாவது ஒரு தொழில் செய்தோ அல்லது ஏதாவது ஒரு உதவி பெற்று சிறு சிறு தொழில்கள் தொடங்கி உங்களை முன்னேற்றிக் கொள்ள முன் வரவேண்டும். அதற்கும் அரசு மானியக்கடன் வழங்குகிறது. இன்றையதினம் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. அந்த உபகரணங்களை எல்லாம் இங்கு கலந்து கொண்டிருக்க கூடிய பயனாளிகளான உங்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவருக்கும் உலக மாற்றுத்திறனாளி தின வாழ்த்துக்கள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.1,14,400 மதிப்பில் 34 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியும், தலா ரூ.6359 மதிப்பில் 75 பயனாளிகளுக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரமும், தலா ரூ.14,490 மதிப்பில் 45 பயனாளிகளுக்கு திறன்பேசிகளையும், தலா ரூ.3285 மதிப்பில் 10 பயனாளிகளுக்கு காதொலிக்கருவிகளையும், தலா ரூ.15,750 மதிப்பில் 10 பயனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலிகளையும், தலா ரூ. 11,445 மதிப்பில் 02 பயனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலிகளையும், சுய வேலைவாய்ப்பு சிறு மற்றும் குறுந்தொழில் வங்கிக் கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.2,10,000 நிதியுதவியும், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 20 நபர்களுக்கு மொத்தம் ரூ.12000 பரிசுத்தொகை என மொத்தம் 206 பயனாளிகளுக்கு ரூ. 54 இலட்சத்து 53 ஆயிரத்து 815 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் சிறப்பு பள்ளி மாணவ மற்றும் மாணவியர்களின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரமநாயகம், செவிதிறன் மற்றும் பேச்சு பயிற்சியாளர் ராஜேஸ்வரி, மாற்றுத்திறனாளி நலன் சங்கங்களின் பிரதிநிதிகள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஈர்ப்பு வாகனம் 30ஆம் தேதி பொது ஏலம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:42:47 PM (IST)

ஈரோட்டில் 18ஆம் தேதி விஜய் பரப்புரை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தவெக!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:18:24 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை; மூடி மறைக்க ரூ. 10 லட்சம்: அன்புமணி கண்டனம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 12:03:34 PM (IST)

சென்னையில் ரூ.39.20 கோடியில் ஹஜ் இல்லம் : முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:32:29 AM (IST)

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து : இஸ்ரேல் பெண்கள் உட்பட 16 பேர் காயம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:19:04 AM (IST)

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 8:40:47 PM (IST)


.gif)