» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சேலத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி விஜய் பிரசாரம்: காவல்துறை அனுமதி அளிப்பதில் சிக்கல்?
வெள்ளி 21, நவம்பர் 2025 8:13:03 AM (IST)

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக சேலத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நிர்வாகிகள் சார்பில் போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி கரூரில் விஜய் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய் தனது பிரசார பயணத்தை தற்காலிகமாக நிறுத்தினார். தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து விஜய் ஆறுதல் கூறியதோடு, சமீபத்தில் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடித்தார்.
இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் மீண்டும் எப்போது பிரசாரத்தை தொடங்குவார் என்று அவரது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அதே சமயம் மீண்டும் கரூர் சம்பவம் போல் அரங்கேறுவதை தடுக்க அக்கட்சி தலைமை பல கட்ட நகர்வுகளை எடுத்து வருகிறது.
இந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக சேலத்தில் இருந்து விஜய் தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்குவதாக சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வேகமெடுத்தன. ஆனால் இதை அக்கட்சியின் நிர்வாகிகள் உறுதிபடுத்த முன்வரவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சேலத்தில் பிரசாரம் தொடங்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் விஜய்யிடம் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. இது விஜய் கட்சி தொண்டர்கள் இடையே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது.
இதை உறுதி செய்யும் விதமாக தமிழக வெற்றிக்கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று காலை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரியை நேரில் சந்தித்து சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ஆம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்ய உள்ளதாகவும், அதற்கு உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்குமாறும் கூறி மனு ஒன்றை அளித்தனர்.
மேலும், அவர்கள் சேலம் கோட்டை மைதானம், பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள போஸ் மைதானம், சீலநாயக்கன்பட்டி அருகில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள திறந்தவெளி மைதானம் என 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து விஜய்யின் பிரசாரம் சேலத்தில் இருந்து தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அனுமதி அளிப்பதில் சிக்கல்?
த.வெ.க. தலைவர் விஜய் டிசம்பர் 4-ஆம் தேதி சேலத்தில் பிரசாரத்தை தொடங்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பிரசாரத்திற்கு முந்தைய நாள் 3-ஆம் தேதி கார்த்திகை தீபம் நிகழ்வுக்காக திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கான போலீசார் தமிழகம் முழுவதும் இருந்தும் செல்வார்கள். அதே வேளையில் டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது வழக்கம். சமீபத்தில் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் அரங்கேறி இருப்பதால் இந்த ஆண்டு உச்சக்கட்ட பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். இதனால் 4-ஆம் தேதி சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாற்று தேதியை தலைமையிடம் கேட்டு வேறு ஒரு தேதியை வழங்குமாறு போலீஸ் சார்பில் த.வெ.க. நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை நாளை தவிர்த்த விஜய்
த.வெ.க. தலைவர் விஜய் வார இறுதி விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளை கருத்தில் கொண்டு மாவட்டம் தோறும் பிரசாரம் மேற்கொண்டார். இதனால் அவரை காண தொண்டர்கள், பெண்கள் என ஏராளமானோர் குவிந்தனர். இந்த நிலையில் கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தால் அவரது பிரசார பயணத்துக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது.
தற்போது மீண்டும் சேலத்தில் இருந்து தனது பிரசாரத்தை மேற்கொள்ள உள்ள விஜய் இந்த முறை, வார இறுதி விடுமுறை நாட்களை தவிர்த்து, வார பணி நாட்களான திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமைக்குள் தனது பிரசார கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் ஒருபகுதியாக தான் அவர் சேலத்தில் வருகிற 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) கூட்டம் நடத்த போலீசில் அவரது கட்சி நிர்வாகிகள் அனுமதி கேட்டு கடிதம் வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த தடை!
வெள்ளி 21, நவம்பர் 2025 12:27:41 PM (IST)

லஞ்ச வழக்கில் தீயணைப்புதுறை அதிகாரியை சிக்க வைக்க முயற்சி? போலீசார் விசாரணை
வெள்ளி 21, நவம்பர் 2025 11:35:35 AM (IST)

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை : இன்ஸ்டா பிரபலம் உள்பட 6 பேர் கைது
வெள்ளி 21, நவம்பர் 2025 11:15:03 AM (IST)

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
வெள்ளி 21, நவம்பர் 2025 11:09:13 AM (IST)

திருநெல்வேலியில் கூட்டுறவு வார விழா: ரூ.107.71 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கல்
வியாழன் 20, நவம்பர் 2025 5:54:26 PM (IST)

தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 20, நவம்பர் 2025 5:00:12 PM (IST)


.gif)