» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வ.உ.சிதம்பரனார் 89-வது நினைவு தினம் நாளை அனுசரிப்பு : தமிழக அரசு தகவல்
திங்கள் 17, நவம்பர் 2025 11:34:09 AM (IST)
செக்கிழுத்த தியாகச் செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளையொட்டி தமிழக அரசு சார்பில் நாளை மரியாதை செலுத்தப்படுகிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை "தியாகத் திருநாள்” எனக் கடைப்பிடிக்குமாறு 3.9.2021 அன்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளான இந்த ஆண்டின் ”தியாகத் திருநாள்” நாளை (18.11.2025) அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், துணை மேயர், உள்ளாட்சி பிரநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
செக்கிழுத்த தியாகச் செம்மல் ! கப்பலோட்டிய தமிழன்! வ.உ.சிதம்பரனார், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை - பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 5.9.1872 அன்று மகனாகப் பிறந்தார். ஒட்டப்பிடாரத்தில் அடிப்படைக் கல்வியையும், தூத்துக்குடியில் உயர்நிலைக் கல்வியையும், சட்டக் கல்வியைத் திருச்சியிலும் பயின்று வழக்கறிஞர் ஆனார்.
வ.உ.சிதம்பரனார் சமூக சேவையிலும் அரசியல் பணியிலும் படிப்படியாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழ்நாட்டிலிருந்து பாடுபட்ட தலைவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தமது குருவாக ஏற்றுக் கொண்டு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்திடப் பாடுபட்டார்.
ஆங்கிலேயரின் கப்பல் வாணிகத்தை முறியடித்திட அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும், தூத்துக்குடியில் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே "கப்பலோட்டிய தமிழன்” எனப் பெயர் பெற்றார்.
வ.உசிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காகப் பொதுமக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்கள். இதன் காரணமாக, 1908-ம் ஆண்டு கோவை சிறையில் அடைத்தும் வ.உ.சி.யை செக்கிழுக்க வைத்தார்கள்.
தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், தாய்மொழியான தமிழ்மொழி மீது கொண்டிருந்த தணியாத பற்றின் காரணமாக பல அரிய நூல்களைப் படைத்தார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழை எப்போது துவங்கும்? வெதர்மேன் தகவல்!
திங்கள் 17, நவம்பர் 2025 3:44:28 PM (IST)

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு : வருவாய்த் துறை கூட்டமைப்பு அறிவிப்பு!
திங்கள் 17, நவம்பர் 2025 12:26:46 PM (IST)

எஸ்ஐஆர் படிவங்களை நிரப்ப திமுக இளைஞர் அணி உதவ வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
திங்கள் 17, நவம்பர் 2025 11:06:00 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
திங்கள் 17, நவம்பர் 2025 8:30:28 AM (IST)

எஸ்ஐஆர் சிறப்பு முகாமில் 2,82,888 படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது - ஆட்சியர் தகவல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 1:34:39 PM (IST)


.gif)