» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எஸ்ஐஆர் சிறப்பு முகாமில் 2,82,888 படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது - ஆட்சியர் தகவல்

ஞாயிறு 16, நவம்பர் 2025 1:34:39 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமில் மொத்தம் 2,82,888 கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்த முகாமில் கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறப்பட்டு வருவதை இன்று (16.11.2025) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டார். இம்முகாமில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தினுடைய உத்தரவின்படி, சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நமது தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள 14,90,000 வாக்காளர்கள் அனைவருக்குமான கணக்கெடுப்பு படிவங்கள் அச்சடிக்கப்பட்டு, அவை அனைத்தும் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டு இருக்கிறது. 

96% க்கும் மேலான படிவங்களை வாக்காளர்களுக்கு, வாக்குபதிவு அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வழங்கியிருக்கிறார்கள். அந்த படிவங்களை பூர்த்தி செய்வதற்கும், திரும்ப பெறுவதற்கும் வாக்காளர்களுக்கு உதவிடும் வகையில் நேற்றும், இன்றும், சிறப்பு முகாம்களை நடத்தி இருக்கிறோம். இந்த முகாம்களில் அதிக வாக்காளர்கள், மிகவும் ஆர்வத்துடன், அவர்களுடைய விவரங்களை பூர்த்தி செய்து, அந்த படிவங்களை எல்லாம் திரும்ப ஒப்படைத்து இருக்கிறார்கள். 

நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி, நடைபெற்ற முகாம் மூலமாக 1,82,200 வாக்காளர்கள் தங்களுடைய படிவங்களை பூர்த்தி செய்து, வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) கொடுத்திருக்கிறார்கள். மேலும், தேர்தல் ஆணையத்தினுடைய இணையதளத்தில் பூர்த்தி செய்து ஏற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்றைக்கும் இந்தச் சிறப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கும் அதிகமான வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்காக, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். 

கல்லூரி மாணவர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், உள்ளிட்ட பல்வேறு நபர்கள் படிவங்களை பூர்த்தி செய்வதற்காகவும் திரும்ப பெறுவதற்காகவும் உதவி செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினுடைய முகவர்களும் உதவி செய்து, அவர்களுடைய படிவங்களை பூர்த்தி செய்வதற்கு உதவி செய்து வருகின்றனர். 

மேலும், இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில், படிவங்களை கொடுக்காத நபர்கள் அனைவரையும், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று, அவர்களின் வீடுகளுக்கு வந்து பூர்த்தி செய்து, அந்த படிவங்களை எல்லாம் மீண்டும் திரும்ப சேகரிக்கும் பணியில் ஈடுபடுவோம். வாக்காளர்கள் அனைவரின் விவரங்களை தேடுவதற்கான வசதிகள் எல்லாம் ஏற்படுத்தி இருக்கிறோம். 

அதன் மூலமாக வாக்காளர்களுடைய 2002 வாக்காளர் பட்டியலில் எங்கிருந்தார்கள் என்பதைத் தேடி, கண்டறிந்து, அதை பூர்த்தி செய்வதற்கான முழு உதவிகளையும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மற்ற அலுவலர்களும் செய்து வருகிறார்கள். எந்தவிதமான பிரச்சனைகளுமின்றி சீரான முறையில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. முகாம்களுக்கு வராதவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று படிவங்களை திருப்பி வாங்குவார்கள். 

மொத்தம் 3 முறை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். இதுவரை 2 முறை சென்று இருக்கிறார்கள். மூன்றாவது முறை சென்று படிவங்களை திருப்பி பெற்றுக் கொள்வார்கள். ஆகையால், யாரும் விடுபடாமல் அனைத்து வாக்காளர்களின் படிவங்களும் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். 

மேலும், இன்றையதினம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைக்குளம், பட்டணமருதூர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பலோடை, பனையூர், குளத்தூர், பிள்ளையார்நத்தம், விளாத்திகுளம், படர்ந்தபுளி, எட்டயபுரம், இளம்புவனம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி நகராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்த முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். இன்றையதினம் நடைபெற்ற முகாமில் 1,00,598 கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. எனவே, இரண்டு நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமில் மொத்தம் 2,82,888 கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

இம்முகாமில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், வட்டாட்சியர்கள் ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி, தேர்தல் வட்டாட்சியர் மற்றும் கோவில்பட்டி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

Ramanathan, p & t colonyNov 17, 2025 - 02:19:55 PM | Posted IP 162.1*****

Till today forms not issued

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory