» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் குடும்பம் தலையீடு : செங்கோட்டையன் குற்றச்சாட்டு

திங்கள் 3, நவம்பர் 2025 11:49:10 AM (IST)

அதிமுகவில் குடும்ப அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மகன், மாப்பிள்ளை, மைத்துனரின் தலையீடு உள்ளது என்று செங்கோட்டையன் கூறினார். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்குமுன் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.

இதையடுத்து, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அதேவேளை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக செங்கோட்டையன் அறிவித்தார். இந்நிலையில், இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது: எம்.ஜி.ஆர். காலம் முதல் இன்று வரை ஒரே நிலைப்பாட்டுடன் நான் இருந்து வருகிறேன். தி.மு.க.வில்தான் குடும்ப அரசியலில் இருக்கிறது என்றில்லை. அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மகன், மாப்பிள்ளை, மைத்துனரின் தலையீடு உள்ளது என்பது நாடறிந்தது. நான், இந்த இயக்கம் (அதிமுக) வலுப்பெற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பணியாற்றி வருகிறேன். ஆனால், சிலர் தன்னால் தான் முடியும் என்று தன்னையும் ஏமாற்றிக்கொண்டு, மற்றவர்களையும் ஏமாற்றக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory