» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!

ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

ஓசூரில் பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் 2 மகன்களை கொன்று விட்டு தூத்துக்குடி இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்கற்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபூபதி (45). இன்ஜினியர். இவருடைய மனைவி பார்வதி (38). இவர்களுக்கு நரேந்திர பூபதி (14), லதீஷ் பூபதி (12) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். சிவபூபதி தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

மகன்கள் இருவரும் ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பார்வதி கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் சிவபூபதி, ஓசூரிலேயே வசித்து வரும் தனது தம்பி சிவப்பிரகாசத்துக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்யப்போவதாக கூறிவிட்டு இணைப்பு துண்டித்துவிட்டார். இதை கேட்டு பதறிய சிவப்பிரகாசம், அவசர அவசரமாக சிவபூபதி வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை.

இதனால் செய்வது அறியாது திகைத்த சிவப்பிரகாசம், அட்கோ போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வீட்டில் சிவபூபதி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையிலும், படுக்கையில் அவருடைய 2 மகன்களும் பிணமாக கிடந்தனர்.

மேலும் சிவபூபதி தனது வயிற்று மற்றும் தோள்பட்டை பகுதியில் கடிதத்தை ஒட்டி இருந்தார். அதில் எனக்கு கடன் தொல்லை அதிகமாகி விட்டது. அதனால் இந்த உலகத்தைவிட்டு போகிறேன். என்னுடைய 2 மகன்களையும் அழைத்து செல்கிறேன் என்றும் எழுதப்பட்டு இருந்தது. தோள்பட்டையில் ஒரு துண்டு சீட்டு ஒட்டி இருந்தது. அதில் நல்ல உள்ளம் படைத்த யாராவது எனது மகன்கள் படிக்கும் பள்ளிக்கு காம்பவுண்டு சுவர் கட்டித்தர வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அதன் விவரம் வருமாறு: ஆன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம் கொண்ட இவர், தனது சொந்த ஊரிலேயே பங்குசந்தையில் முதலீடு செய்து வந்துள்ளார். அங்கு அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னைக்கு சென்ற சிவபூபதி அங்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு நஷ்டத்தை சந்தித்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகம் செய்தால் நஷ்டத்தை ஈடு செய்யலாம் என எண்ணி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் ஓசூரில் குடியேறினார். ஆனாலும் அவருக்கு தொடர் நஷ்டம் ஏற்பட்டது. இப்படி தொடர்ந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் பணப்பிரச்சினை ஏற்பட்டது.

இதில் வேதனை அடைந்த பார்வதி கணவர், குழந்தைகளை விட்டு விட்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தொழிலிலும் நஷ்டம், மனைவியும் பிரிந்து சென்று விட்டார். இதனால் சிவபூபதி மிகவும் வேதனை அடைந்தார்.

எனவே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது. இதற்கிடையே தான் இறந்து விட்டால் தன்னுடைய மகன்கள் என்ன செய்வார்கள்? என்று நினைத்த சிவபூபதி பெற்ற மனதை கல்லாக்கி கொண்டு, தனது 2 மகன்களையும் கழுத்தை நெரித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துள்ளதும் தெரியவந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory