» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆதிச்சநல்லூரில் விரைவில் சைட் மியூசியம் அமைக்கப்படும் : தொல்லியல் அதிகாரி தகவல்
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:11:42 PM (IST)
ஆதிச்சநல்லூர் அகழாய்வு குழிகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தொல்லியல் பொருட்கள் சேதமடைந்துள்ள நிலையில், விரைவில் சைட் மியூசியம் அமைக்கப்படும் என்று மத்திய தொல்லியல் அதிகாரி தெரிவித்தார்.
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 2004 ல் தியாக சத்திய மூர்த்தி தலைமையில் அகழாய்வு நடந்தது. இந்த அகழாய்வு அறிக்கை வெளிவரவில்லை. எனவே 2017 ஆம் ஆண்டில் மதுரை உயர் நீதி மன்றத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில் 2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதன் படி திருச்சி மண்டலம் புதிதாக அமைக்கப்பட்டு டாக்டர் அருண்ராஜ் இயக்குனராக அறிவிக்கப்பட்டார்.
அதன்பின் 2021 ஆம் ஆண்டு கனிமொழி எம்.பி சைட்மியூசியம் பணிகளை துவக்கி வைத்தார். மிக வேகமாக பணி நடந்து இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியம் ஆதிச்சநல்லூரில் அமைந்தது . இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.5 கோடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம், சைட் மியூசியம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. முதல்கட்டமாக மாதிரி சைட் மியூசியமும் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
இதை கடந்த 5.08.2023 அன்று கனி மொழி எம்.பி முன்னிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் திறந்து வைத்தார். அதே நாளில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அகழாய்வு நடந்த இடங்களில் தென்னை ஓலை கீற்றிலான கொட்டகை அமைத்து இருந்தனர். அதன் மீது தார்ப்பாய் சுற்றி இருந்தனர். அகழாய்வில் கிடந்த பொருட்கள் குறித்து ஆய்வறிக்கை தயாரிக்கும் பணியில் மத்திய தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இயக்குனர் டாக்டர் அருண்ராஜ் பதவி உயர்வு பெற்று டெல்லிக்கு சென்றார். அதன் பின் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. மாதிரி சைட் மியூசியம் அமைக்கப்பட்ட பி சைட்டிலும் 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் வந்த மழை வெள்ளம் புகுந்தது. இதனால் சைட் மிகவும் பாதிக்கப்பட்டது. அதே வேளையில் மிகவும் பிரமாண்டமாக சி சைட்டில் சைட் மியூசியம் அமைய அகழாய்வு முடிந்த நிலையில் போதிய பணம் ஒதுக்கீடு இல்லாமல் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையில் இந்த சைட்டில் போடப்பட்ட தற்காலிக செட் மழை வெள்ளத்தில் ஒழுக ஆரம்பித்தது. இதனால் பல லட்சம் செலவு செய்து மியூசியம் அமைக்காத காரணத்தினால் அந்த பணி செய்த இடமே வீணாகிக்கொண்டிருந்தது. உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஊர் பொதுமக்கள் இடத்தினை தானமாக அளித்திருந்தார்கள். அந்த இடத்தில் அடிக்கல் நாட்டிய படி பணியும் கிடப்பில் கிடந்தது.
இதற்கிடையில் தொல்லியல் ஆர்வலர்கள் ஆதிச்சநல்லூரில் மியூசியம் அமைக்க வேண்டும். என மனு செய்து வந்தனர். தொடர்ந்து இயக்குனர்களாக வந்தவர்கள் வட நாட்டை சேர்ந்தவர்களாக இருந்த காரணத்தினால் ஆதிச்சநல்லூர் மீது கவனம் செலுத்தவில்லை. எனவே தமிழர் ஒருவரை திருச்சி மண்டல இயக்குனராக பணி நியமனம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்து வந்தது.
இந்த நிலையில் தான் தமிழகத்தினை சேர்ந்த அறவாழி என்பவர் திருச்சி மண்டல இயக்குனராக கடந்த மாதம் பொறுப்பேற்றார். இதனால் ஆதிச்சநல்லூர் பணிகள் முடுக்கி விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே அவரும் ஆதிச்சநல்லூர் வருகைதந்து சி சைட்டில் உள்ள ஓலைக்கூரையை அகற்றி நிரந்தர கூரை அமைத்து, கண்ணாடி கிளாஸ் மூலம் சைட் மியூசியம் அமைக்கும் பணிக்கான நடவடிக்கை எடுத்தார்.
இந்த பணிக்கான மத்திய அரசு அனுமதிக்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் (16.10.2025) ஆதிச்சநல்லூரில் வடகிழக்கு பருவ மழை பெய்தது. அகழாய்வு நடந்த இடத்தின் மீது அமைக்கப்பட்ட ஓலைக்கீற்று கொட்டகைகளும் சேதமடைந்த நிலையில் இருந்தன. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குழிகளுக்குள் மழைநீர் புகுந்தது.
அங்கிருந்த பழங்கால முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் சேதமடைந்தன. கீற்றுக்கொட்டகை வழியாக மழைநீர் ஒழுகிய இடங்களில் வாளிகள் வைத்தும் தண்ணீரை அகற்றினர். அகழாய்வு குழிகளுக்குள் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் தொல்லியல் துறை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். எனவே ஆதிச்சநல்லூரில் விரைவில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆதிச்சநல்லூர் சைட் பொறுப்பு அதிகாரி சங்கர், ஆதிச்சநல்லூர் சி. சைட்டில் பி சைட்டில் அமைந்து இருப்பது போலவே சைட் மியூசியம் அமைக்க அனைத்து நடவடிக்கையும் மத்திய தொல்லியல் துறையினரால் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணி துவங்கும் என்று தகவல் அளித்துள்ளார். விரைவில் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த மியூசியமும், பிரிந்து கிடக்கும் அகழாய்வு இடத்தில் சைட் மியூசியமும் அமைக்க வேண்டும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் : புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:49:58 PM (IST)

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் : பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:16:40 PM (IST)

மதுரை மேயரின் ராஜினாமா தீர்மானம் ஏற்பு: 5 நிமிடங்களில் மாநகராட்சி கூட்டம் நிறைவு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:10:07 PM (IST)

தி.மு.க.வின் உருட்டுக்கடை அல்வா: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:54:21 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது : தேர்தல் ஆணையம்
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:23:52 PM (IST)

நூறு கோடி இந்துக்களை அவமதிக்கும் செயல்: துணை முதல்வர் உதயநிதிக்கு பாஜக கண்டனம்!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:17:33 PM (IST)
