» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழுவை நியமிக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் கெடு

புதன் 15, அக்டோபர் 2025 8:43:17 AM (IST)

திருச்செந்தூர் கோவிலுக்கு அறங்காவலர் குழுவை நியமிக்க 4 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகை பெருமளவு அதிகரித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கோவில்களில் 5 பேர் கொண்ட அறங்காவலர் குழு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்பட வேண்டும். 

இந்தக்குழுவில் ஒரு பெண் மற்றும் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவரும் இடம்பெற்று இருக்க வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே நான் வழக்கு தொடர்ந்தேன். அதனை விசாரித்த ஐகோர்ட்டு, கோவில்களில் சட்டப்படி உரிய முறைப்படி அறங்காவலர் குழுவை நியமிக்கும்படி உத்தரவிட்டது.

அதன் பேரில் கடந்த 2021-ம் ஆண்டில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது. அவர்களின் பதவிக்காலம் முடிந்ததால் தற்போது தக்கார் மூலமாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

எனவே திருச்செந்தூர் கோவிலுக்கு அறங்காவலர் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் திருச்செந்தூர் கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி பூர்ணிமா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடந்ததால் அறங்காவலர்கள் குழு நியமன நடவடிக்கை தாமதமாகிவிட்டது. தற்போது அதற்கான பணி் நடந்து வருகிறது என்றார்.

விசாரணை முடிவில், அங்கு 4 மாதங்களில் அறங்காவலர்கள் குழு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் இந்த கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory