» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேன்களை மினி பஸ்களாக இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி: நிபந்தனைகள் அறிவிப்பு

வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:27:56 PM (IST)

12 முதல் 16 இருக்கைகள் கொண்ட தனியார் வேன்களை மினி பஸ்களாக இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. 

தமிழ்நாட்டில் மக்கள் தொகை, வாகன நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளதால் அதற்கேற்ப பொது போக்குவரத்து வசதியையும் அரசு கூடுதலாக செய்து வருகிறது. இதையொட்டி சிறிய தெருக்களிலும் பஸ்கள் செல்வதற்காக மினி பஸ் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் அரசு அறிமுகம் செய்தது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழக அரசின் திட்டத்தின்படி 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயங்கும் வகையில் குறைந்தது 5 ஆயிரம் மினி பஸ்கள் இப்போது தேவைப்படுகிறது. இந்த சூழலில் மினி பஸ் சேவைக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பலரும் தங்கள் பகுதிக்கு மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குக்கிராம மக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அதன்படி மினி பஸ்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனியார் வேன்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை மினி பஸ்களாக இயக்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் பஸ்களை போன்று இந்த வேன்களில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பஸ்களில் 200 செ.மீ. உயரமும், அமர்ந்து கொண்டு மட்டுமே பயணம் செய்யும் வாகனங்களில் 150 முதல் 200 செ.மீ உயரமும் இருக்கலாம்.

இப்போது வேன்களை மினி பஸ்களாக இயக்குவதற்காக பொதுப் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச உயரம் 185 செ.மீ. என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இனி நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் பஸ்கள் 200 செ.மீ. உயரமும், அமர்ந்து கொண்டு மட்டுமே பயணிக்கும் வாகனங்கள் 150 முதல் 200 செ.மீ. உயரமும் இருக்கலாம்.

இந்த தளர்வு மேக்சி-கேப்ஸ் போன்ற சிறிய 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வாகனங்கள் மினி பஸ் திட்டத்தில் இணைய உதவும். இதுபற்றி போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் ஆர்.கஜலட்சுமி கூறுகையில், 'இதன் மூலம் இம்மாத இறுதிக்குள் 2000 வேன்கள் பொதுப்போக்குவரத்து சேவையில் இணையும் என எதிர்பார்க்கிறோம். முக்கியமாக இந்த வகை வேன்களின் உயரம் குறைவாக இருக்கும் என்பதால் நின்று கொண்டு பயணிக்க அனுமதி கிடையாது.

இது மலைப் பகுதிகள் மற்றும் குறுகிய சாலைகள் கொண்ட கிராம பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த புதிய திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், வேன்களை மினி பேருந்துகளாக மாற்றி பயன்படுத்தும் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்யுங்கள். 

இதுபற்றி விரிவான அறிக்கையை அடுத்த ஒரு மாதத்தில் சமர்பிக்க வேண்டும். எந்தெந்த பகுதிகளில் மினி பஸ் வசதிகள் தேவைப்படுகின்றன என்பது பற்றி விவரங்கள் சேகரித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். வேன்களை மினி பஸ்களாக மாற்றும் திட்டத்தின் மூலம் பள்ளி வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவை பொதுப் போக்குவரத்து வசதிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகப்படியானோரை ஏற்றி செல்லக் கூடாது. தொங்கி கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory