» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வியாழன் 17, ஜூலை 2025 11:27:01 AM (IST)

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் காரையாறு பகுதியில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை மற்றும் பங்குனி உத்திரம் நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன் செய்து வழிபடுவது வழக்கம். மேலும் குலதெய்வம் தெரியாதவர்களும் சொரிமுத்து அய்யனாரை தங்கள் குலதெய்வமாக ஏற்று குலதெய்வ வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு வருகிற 24-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. ஆடி அமாவாசையன்று தீர்த்தவாரி நடைபெறும். இதை முன்னிட்டு 24 மற்றும் 25-ம்தேதி என இரு நாட்களிலும், மாலை 5 மணிக்கு பிரம்மாட்சி அம்மன் சன்னதி, தளவாய் மாடசாமி சன்னதி மற்றும் பட்டவராயன் சன்னதி முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்குதலும், பக்தர்கள் முன் சிங்கம்பட்டி ஜமீன் ராஜ தர்பாரில் காட்சியளித்தலும் நடைபெறும்.
வருகிற 26-ம்தேதி சிங்கம்பட்டி ஜமீன் சாமி தரிசனம் நடைபெறும். 24-ம்தேதி முதல் 26-ம்தேதி வரை தளவாய் மாடசாமி, சங்கிலி பூதத்தார், இசக்கியம்மன், பட்டவராயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்கள் நலன் கருதி பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தெரிவித்துள்ளார்.
அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்கள் நலன் கருதி பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் வனத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, நான்கு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமிரபரணி ஆறு மற்றும் அது உருவாகும் வனத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்ந்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்முறையில் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் முந்தைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் பொருட்களை எடுத்து செல்ல ஜூலை 22-ஆம் தேதி காலை 06:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மட்டும் பாபநாசம் சோதனை சாவடியில் இருந்து தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
ஜூலை 19, ஜூலை 20 மற்றும் ஜூலை 21 ஆகிய நாட்கள் முழுவதும் திருக்கோயில் நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் காரணத்தினால் பாபநாசம் வன சோதனை சாவடி மூடப்படும். இந்த நாட்களில் அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ஜூலை 23-ஆம் தேதி முதல் ஜூலை 25-ஆம் தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே திருக்கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது.
பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டுமே திருக்கோவிலுக்கு சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது. ஜூலை 26-ஆம் தேதி காலை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். பக்தர்கள் பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு ஜூலை 26 -ஆம் தேதி காலை 06:00 மணி முதல் மாலை 03:00 மணிவரையிலும் பாபநாசம் திருக்கோவில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும்.
கீழே இறங்கும் பக்தர்களுக்காக அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்.
ஜூலை 27 மற்றும் ஜூலை 28-ஆம் தேதிகளில் தூய்மை பணிகள் மற்றும் திருக்கோவில் உழவார பணி காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஜூலை 29-ஆம் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி திருக்கோவிலுக்கு சென்று வரலாம்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், தடை செய்யப்பட்ட 27 வகையான நெகிழிப் பொருட்கள், கெமிக்கல் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள், மண்ணெண்ணெய், மாசு ஏற்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் ஜனரேட்டர்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. மது, குட்கா உள்ளிட்டவற்றை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
கோவில் தவிர்த்த வனப்பகுதிக்குள்ளும், ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இல்லை. திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் குடில்கள் அமைக்கப்பட உள்ளது. பக்தர்கள் திருக்கோயில் மூலம் அமைக்கப்பட உள்ள குடில்களில் மட்டுமே தங்க வேண்டும். தனி நபர்களிடம் குடில்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. பொது இடங்களில் அசுத்தம் செய்யாமல் திருக்கோயில் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 200 கழிவறைகளை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.
மழைக் குறைவு காரணமாக நெருப்பு பாதிப்பு அல்லது திடீர் கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையோடும் பாதுகாப்போடும் வனத்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளின் அறிவுரையை தவறாமல் பின்பற்றியும் திருக்கோவிலுக்கு சென்றுவர அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறைகளோடு ஒத்துழைக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் அனைவரையும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்த டிஎஸ்பியின் கார் பறிப்பு? நடந்தே சென்றதால் சர்ச்சை!!
வியாழன் 17, ஜூலை 2025 5:31:16 PM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

பெருந்தலைவர் குறித்து சர்ச்சையை ஆரம்பித்தது யார்? முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!
வியாழன் 17, ஜூலை 2025 3:57:09 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)

ரூ.5.24 கோடி மோசடி: தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்!
வியாழன் 17, ஜூலை 2025 3:19:42 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா திட்டவட்டம்: அண்ணாமலை பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:10:34 PM (IST)
