» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்த டிஎஸ்பியின் கார் பறிப்பு? நடந்தே சென்றதால் சர்ச்சை!!
வியாழன் 17, ஜூலை 2025 5:31:16 PM (IST)

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் பறிக்கப்பட்டு, சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் அவர் நடந்தே அலுவலகம் சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் சட்டவிரோத சாராயம் மற்றும் மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்துள்ளதுடன், சட்டவிரோத சாராயம் மற்றும் மதுபான கடத்தல் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களில் 700 பேரை டிஎஸ்பி சுந்தரேசச் சிறையில் அடைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. தொடர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இப்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மது கடத்தல்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் டிஎஸ்பி சுந்தரேசனின் நான்கு சக்கர வாகனம் மாவட்ட காவல்துறையால் பறிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன..
முதலமைச்சர் வருகைக்கு முன்னர் அமைச்சர் எஸ்கார்டு செல்வதற்கு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை கேட்டு கொடுக்க மறுத்ததால், அவரை பாதுகாப்பு பணிக்காக வெளியூருக்கு அனுப்பி வைத்த மாவட்ட காவல்துறையினர், மீண்டும் பணிக்கு வந்தவுடன் வாகனத்தை அனுப்பாமல் பறித்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் டி.எஸ்.பி சுந்தரேசன் சில நாட்களாக இருசக்கர வாகனத்தில் பணிகளுக்கு சென்று வந்ததாகவும், அந்த வீடியோ காவல்துறை குரூப்பில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டி.எஸ்.பி சுந்தரேசன் இன்று தனது வீட்டில் இருந்து மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு பணிக்கு நடந்து சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மது, சாராயம் உள்ளிட்ட போதைப் பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நேர்மையான டிஎஸ்பியை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பந்தோபஸ்து டியூட்டி என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு பணிக்கு செல்லுமாறு தூக்கி அடிப்பதும், பணிக்குத் திரும்பிய டிஎஸ்பிக்கு வாகனத்தை வழங்காமல் நடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
காவல்துறை மறுப்பு
முன்னதாக மாநில மனித உரிமை கமிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன், காஞ்சிபுரம் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலைவழக்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுன்டர்களில் விசாரணை அதிகாரியாக சுந்தரேசன் பணியாற்றியுள்ளாராம்.
அப்போது அவர் காவல்துறையினரின் தவறுகளை தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்று புகார்கள் எழுந்துள்ளன. டிஎஸ்பிக்கு வாகனம் வழங்கப்படாதது குறித்து மாவட்ட காவல்துறையில் விளக்கம் கேட்டபோது, அவரது வாகனம் பழுது காரணமாக ரிப்பேர் செய்ய அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தனர். அதேபோல் பரவும் தகவல்கள் வதந்தி என்று திட்டவட்டமாக மறுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

பெருந்தலைவர் குறித்து சர்ச்சையை ஆரம்பித்தது யார்? முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!
வியாழன் 17, ஜூலை 2025 3:57:09 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)

ரூ.5.24 கோடி மோசடி: தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்!
வியாழன் 17, ஜூலை 2025 3:19:42 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா திட்டவட்டம்: அண்ணாமலை பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:10:34 PM (IST)

ம.தி.மு.க.வுக்கும், வைகோவுக்கும், துரை வைகோ தான் எதிரியாக வருவார் : மல்லை சத்யா
வியாழன் 17, ஜூலை 2025 12:50:38 PM (IST)
