» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!

புதன் 9, ஜூலை 2025 10:35:19 AM (IST)

நாடு முழுவதும் இன்று தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்குவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

அகில இந்திய அளவில், இன்று அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் தி.மு.க.வின் தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யூ, உள்பட 13 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே இந்த சங்கங்களின் பிரநிதிகள் பங்கேற்பதால் அரசு பஸ்கள் முழு அளவில் இயங்குமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

எனினும், தமிழ்நாட்டில் இன்று அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கும். பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

அதற்கிடையில் போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணிந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில், அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்பட வேண்டும். வழக்கமான அட்டவணைப்படி பஸ் சேவைகள் முழுமையாக இயங்குவதை மேலாண்மை இயக்குநர்கள் தனிப்பட்ட முறையில் உறுதி செய்ய வேண்டும். 

மேலாண்மை இயக்குநர்கள் உள்ளூர் போலீஸ் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, பஸ் பணிமனைகளுக்கும், பஸ்களுக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்வதை உறுதி செய்ய வேண்டும். பஸ் சேவைகள் இயக்கப்படும் விதம் குறித்து விவரங்களை நிர்வாக இயக்குனர் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

Also Read பொது வேலைநிறுத்தம்: கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பஸ்களுக்கு போதுமான எரிபொருள் நிரப்பி பயணத்திற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், மாநகர் போக்குவரத்து கழகமானது, சென்னை பெருநகர் மற்றும் புறநகர் மாவட்ட பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பெருமளவில் ஈடு செய்கின்ற முதன்மையான சேவை நிறுவனமாகும். எனவே, தொழிலாளர்கள் அனைவரும் இன்று நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெறாமல், வழக்கம் போல பணிக்கு தவறாமல் வர வேண்டும். இன்று வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுகிறது. வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும். பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என இந்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கமும் அறிவித்து உள்ளது. 

இதுபற்றி இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க மாநில தலைவர் த.மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடதுசாரி தொழிற்சங்கங்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது. ஒருதலைப்பட்சமானது. இதனை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

வேலை நிறுத்தத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் கலந்துகொள்ளாது. வழக்கம்போல நமது சேவை தொடரும். இடதுசாரிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக விலைபோனது என்பது அனைவரும் அறிந்ததே. வருகின்ற தேர்தலை கணக்கில் கொண்டு, வெற்று அரசியல் காரணங்களுக்காக இந்த வேலை நிறுத்தத்தை நடத்தி மக்களை திசை திருப்ப தொழிலாளர்களை பலிகடா ஆக்குவதை வன்மையாக கண்டிக்கிறோம். இன்று இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் மக்களுக்கான சேவை தொடரும். அதற்கு தக்க பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள், காவல்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory