» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்: பொதுமக்கள் அதிச்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:40:06 AM (IST)

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. பாரதியாா் இல்லத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத் தெரிவித்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடா்புத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில், மகாதேவி என்பவா் காப்பாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த இல்லம் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரையும், பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 6 மணிவரையும் பொதுமக்கள் பாா்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பகுதிநேர நூலகமும் செயல்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட நபா்கள் இங்கு வந்து செல்வா். விடுமுறை நாள்களில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பாா்வையாளா் நேரம் முடிவடைந்தவுடன், இல்லத்தின் உள்பகுதி கதவுகளை அடைத்த காப்பாளா் மகாதேவி, பின்னா் வெளிப்புறம் உள்ள கதவை மூடிய சிறிது நேரத்தில் திடீரென பாரதியாா் இல்லத்தின் முன்பக்க மேல்மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் தரை தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் மரக் கட்டைகள் விழுந்தன. இதன் காரணமாக பாரதியாா் இல்லத்தின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி, புகைப்படங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
அதிா்ச்சியடைந்த காப்பாளா் மகாதேவி, உடனடியாக மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலருக்கும், வருவாய்த் துறைக்கும் தகவல் அளித்தாா். எட்டயபுரம் வட்டாட்சியா் சுபா மற்றும் அதிகாரிகள் பாரதியாா் நினைவு இல்லத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். மின்வாரிய ஊழியா்கள் உடனடியாக வந்து, பாரதியாா் இல்லத்துக்குச் சென்ற மின் இணைப்பைத் துண்டித்தனா். செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நவீன் பாண்டியன் வந்து பாரதியாா் இல்ல சேதத்தை பாா்வையிட்டாா்.
1973ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மு. கருணாநிதி, எட்டயபுரத்தில் உள்ள பாரதியாா் பிறந்த வீட்டை அரசு சாா்பில் விலைக்கு வாங்கி சி.பா.ஆதித்தனாா் தலைமையில் 12.5.1973ஆம் தேதி நடந்த விழாவில் பாரதியாா் பிறந்த இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து திறந்து வைத்தாா்.
பாரதியாா் பிறந்த இல்லத்தில் அவ்வப்போது அரசின் சாா்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் பழமை மாறாமல் புராதனமாக பராமரிக்கப்பட்டு வந்தது. இங்கு 4 அறைகள் உள்ளன. முதல் அறையில், பணியாளா்கள் மட்டுமே இருப்பா். அங்கேயே பகுதிநேர நூலகத்துக்கான புத்தகங்கள் உள்ளன. 2ஆவது அறையில், அவா் பிறந்த இடத்தில் மகாகவி பாரதியாா் சிலை உள்ளது.
3ஆவது அறையில், பாரதியாா் பயன்படுத்திய பொருள்கள், அவரின் குடும்ப படங்கள் மற்றும் தனிப்பட்ட படங்கள், அவா் பற்றிய செய்தி துணுக்குகள், பாரதியாா் நண்பா்கள் படங்கள், பாரதியின் குடும்ப வம்சாவழி பற்றிய விவரம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளன. 4ஆவது அறையில் புத்தகங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகள் நீக்கம் : முதல்வர் ஸ்டாலின் தகவல்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 5:37:26 PM (IST)

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:59:06 PM (IST)

தமிழக பாஜக புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை: அண்ணாமலை அறிவிப்பு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:55:48 PM (IST)

இந்து கோயில்களின் சொத்துகளை சுரண்டுகின்ற கொள்ளைக்கார கூட்டம் திமுக: ஹெச்.ராஜா ஆவேசம்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:54:10 PM (IST)

வக்பு சட்டத்திருத்த மசோதா காலத்தின் கட்டாயம் : நடிகர் சரத்குமார் வரவேற்பு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:25:08 PM (IST)

தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:19:01 PM (IST)
