» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆளுநரின் குடியரசு தின விழா தேநீர் விருந்து: தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!
வெள்ளி 24, ஜனவரி 2025 5:30:42 PM (IST)
குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அன்றைய தினம் மாலை தமிழக ஆளுநர் மாளிகையில், ஆளுநர் சாபில் தேநீர் விருந்து நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை மறுநாள் மாலை ஆளுநர் ஆர்.என். ரவி சார்பில், தேநீர் விருந்து நடைபெறுகிறது.
இதற்காக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளான தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தமிழக ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி, தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன. இந்த நிலையில் தான் தமிழகத்தில் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு முதல் முறையாக ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியிருப்பதால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.