» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த நாட்டிற்கே பேரிழப்பு: டெல்லியில் மு.க.ஸ்டாலின் பேட்டி

வெள்ளி 27, டிசம்பர் 2024 5:23:27 PM (IST)



மன்மோகன் சிங் மறைவானது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பாகும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மன்மோகன் சிங்கின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது; "பொருளாதார நிபுணர் முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்பானது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பாகும். 

குறிப்பாக தமிழ்நாட்டினுடைய உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தருவதற்கும் துணை நின்றிருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமாக இருந்தாலும், தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையிலே சாலை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதாக இருந்தாலும் சரி, அதேபோல் 100 நாட்கள் வேலைத்திட்டம் என்கின்ற ஒரு புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவர் மன்மோகன் சிங். 

எல்லாவற்றையும் தாண்டி, தமிழர்களுடைய பல ஆண்டு கால கனவாக இருந்து வந்த தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை அன்னை சோனியா காந்தி அவர்களின் துணையோடு அறிவித்து நிறைவேற்றித் தந்தவர் மன்மோகன்சிங். தலைவர் கலைஞரோடு நெருங்கி நட்புணர்வோடு பழகக்கூடியவராக இருந்தவர். அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனைக்குரிய ஒன்று. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் அவர்தான். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்ததற்கும் அவர்தான் காரணம். அதேபோல், சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வருவதற்கும் அவர்தான் காரணமாக இருந்தார். ஆனால் இடையிலே அத்திட்டம் நின்றுவிட்டது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு அவர்தான் காரணமாக இருந்திருக்கிறார்." என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory