» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுக்கு சென்ற அமைச்சர் மீது சேற்றை வீசிய கிராம மக்கள்
புதன் 4, டிசம்பர் 2024 8:41:18 AM (IST)
விழுப்புரம் அருகே, மீட்பு பணிக்கு யாரும் வரவில்லை என்று கிராம மக்கள் சாைலமறியலில் ஈடுபட்டனர். பேச்சு நடத்தச்சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதால் பரபரப்பு நிலவியது.
பெஞ்ஜல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாறு, அதன் கிளை ஆறுகளான மலட்டாறு, பம்பை ஆறு, நரி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 1-ந்தேதி இரவு மலட்டாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அதன் கரையோரம் உள்ள திருவெண்ணெய்நல்லூர், சித்தலிங்கமடம், அரசூர், காரப்பட்டு, இருவேல்பட்டு, ஆனத்தூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல்தான் வெள்ளம் வடிய தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று காலை வரை குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் அதிகாாிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஆத்திரம் அடைந்த அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அரசூர் கூட்டு சாலைக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன், திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் செல்வகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. அமைச்சர் நேரில் வந்து எங்கள் குடியிருப்புகளை பார்வையிட்டால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கிராமமக்கள் கூறினார்கள்.
அதனைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி, போலீஸ் சூப்பிரண்டுகள் தீபக் சிவாச்(விழுப்புரம்), ஜெயக்குமார் (திருவாரூர்), தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான பொன்.கவுதமசிகாமணி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர்.
அமைச்சர் பொன்முடி தனது காரில் இருந்தபடியே இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புகளை பார்வையிட்டார். பின்னா் காரில் இருந்து இறங்கிய அவர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது கிராமமக்கள் கனமழையால் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக நாங்கள் பரிதவித்து வருகிறோம். குடிப்பதற்கு தண்ணீர், உணவு வழங்கவில்லை. அரசு அதிகாாிகளும் வந்து எங்களை பார்க்கவில்லை. இதுவரை எங்கள் குடியிருப்புகளை பார்வையிட வராமல் எங்கு சென்றீர்கள் என்று கூறி அமைச்சரிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து அவர்கள், பாதிக்கப்பட்ட எங்கள் வீடுகளை பார்வையிட வருமாறு வலியுறுத்தினர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த யாரோ சிலர் அருகில் கிடந்த சேற்றை வாரி அமைச்சர் மீது வீசினர். இதில் அமைச்சர் பொன்முடி, பொன்.கவுதமசிகாமணி, ஆட்சியர் பழனி ஆகியோரது சட்டைகளின் மீது சேறு பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் பலத்த பாதுகாப்புடன் அமைச்சரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
பின்னர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர், அரசூர் கூட்டுசாலையில் துண்டிக்கப்பட்ட இடம், இருவேல்பட்டு குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றை நோில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் சாலை மறியலால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
முட்டாள்Dec 4, 2024 - 12:10:36 PM | Posted IP 162.1*****