» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போக்சோ வழக்கில் கைதான உடற்கல்வி ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 3, டிசம்பர் 2024 8:25:57 PM (IST)
திருச்செந்தூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான உடற்கல்வி ஆசிரியர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி கிறிஸ்டியா நகரம் பகுதியைச் சேர்ந்தர் இஸ்ரவேல் மகன் பொன்சிங் (42). இவர் உடன்குடியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்ற இடத்தில், கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
அதன் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய விசாரணை நடத்தி போக்சோ வழக்கில் அவரை கைது செய்தனர். இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் பொன்சிங்கை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று (03.12.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.