» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெள்ள மீட்பு பணிகளில் தமிழக அரசு படுதோல்வி: அன்புமணி குற்றச்சாட்டு!

திங்கள் 2, டிசம்பர் 2024 4:49:43 PM (IST)

வெள்ள மீட்புப் பணிகளிலும், மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்வதிலும் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் எதிர்பார்த்த வேகத்தில் கரையைக் கடக்காமல் பல மணி நேரம் ஒரே இடத்தில் நிலை கொண்டதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ., மழை பெய்திருப்பதாகவும், இது கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத மழை என்றும் கூறப்படுகிறது. 

தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தலில் 32 செ.மீ., மாதம்பூண்டியில் 31 செ.மீ., சேலம் ஏற்காட்டில் 24 செ.மீ., மழை கொட்டித்தீர்த்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் காட்டாற்று வெள்ளத்தைப் போல ஓடிய மழை நீர் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து உள்ளிட்ட வாகனங்களை அடித்துச் சென்றுள்ளன என்பதிலிருந்தே அதன் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் ஏரி போன்று தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் சரபங்கா ஆற்றிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் கடலூர் வரை தென்பெண்ணை ஆற்றிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் பல கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

வரலாறு காணாத மழை பெய்திருப்பது உண்மை தான் என்றாலும், அவற்றை சமாளிக்கும் அளவுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும் கட்டமைப்புகளையும் மீறி, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளும், மழை நீரை ஆறுகளுக்கு கொண்டு செல்லும் கால்வாய்களும் தூர்வாரப்படாதது தான்.

தூர் வாரும் பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசால் ஒதுக்கப்பட்ட நிதி எங்கு சென்றது என்பது யாருக்கும் தெரியவில்லை. பல இடங்களில் கால்வாய்களில் ஓட வேண்டிய மழை நீர் சாலைகளிலும், தெருக்களிலும் ஓடியது தான் அதிக பாதிப்புகளுக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அலட்சியத்தாலும், திறனற்ற செயல்பாடுகளாலும் பேரழிவை உண்டாக்கியுள்ள தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்வதிலும், மீட்புப் பணிகளை மேற்கொள்வதிலும் படுதோல்வி அடைந்து விட்டது. திருவண்ணாமலையில் பாறைகள் உருண்டதால் சேதமடைந்த வீடுகளுக்குள் 7 பேர் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், 18 மணி நேரமாகியும் அவர்கள் மிட்கப்படவில்லை.

பல இடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இது குறித்த கவலை எதுவும் முதலமைச்சருக்கு இல்லை.

வட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; தேவைப்பட்டால் கூடுதலாக மீட்புக் குழுக்களை அந்த பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட 7 பேரையும் உயிருடன் மீட்க வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory