» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரசு அனுமதி அளிக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல்
செவ்வாய் 19, நவம்பர் 2024 5:10:03 PM (IST)
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப் பகுதிகளில் ஒன்றான அரிட்டாப்பட்டியை சீரழிக்கும் வகையிலான இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி ஆகும். அரிட்டாபட்டி , மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன. இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது. இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை கோவில்கள் ஆகியவையும் உள்ளன.
அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அங்குள்ள பல்லுயிர் வாழிடங்களும், புராதனப் பெருமை மிக்க சின்னங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும். இது குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கு தெரியும் என்ற போதிலும் பல்லுயிர் வாழிடத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை சிறிதும் இல்லாமல் டங்ஸ்டன் ஆலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை நியாயப்படுத்த முடியாது. எங்கெல்லாம் சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் சுற்றுச்சூழல் சீரழிகின்றன என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம் ஆகும். அந்த பாடத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும்.
அரிட்டாப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பல்லுயிர் வாழிடத் தலங்கள் ஈடு இணையற்றவை. அவற்றை எதற்காகவும் தியாகம் செய்ய முடியாது. எனவே, அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க முடியாது என்பதால், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் விண்ணப்பித்தாலும் டங்ஸ்டன் சுரங்கத்தை அங்கு அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆனந்த்Nov 20, 2024 - 06:10:19 AM | Posted IP 172.7*****