» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு விவகாரம் : வானதி சீனிவாசன் கண்டனம்

சனி 16, நவம்பர் 2024 5:22:34 PM (IST)

திருநெல்வேலியில் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்வதுடன், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என  பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றிய முகுந்த் வரதராஜன், ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளுடனான மோதலின் போது மரணமடைந்தார். அமரன் படம் மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற ராணுவ அதிகாரியின் பயோ பிக்காக எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ன்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ஜி.வி பிரகாஷ் இசையில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் வசூலைக் குவித்து வருகிறது.

இந்நிலையில், திருநெல்வேலி மேலப்பாளையத்தில் அமரன் படம் வெளியான திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக அடிப்படைவாதிகளின் வெறியாட்டத்தை திமுக அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கூறியதாவது: 'அமரன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள, திருநெல்வேலி மேலப்பாளையம் பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் இன்று அதிகாலை சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு சென்றுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் போரில் வீர மரணம் அடைந்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வீர வரலாறுதான் அமரன் திரைப்படம். மக்களிடம் தேசபக்தியை விதைக்கும் இப்படத்திற்கு சில அடிப்படைவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன.

ஆனாலும் வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக அரசு மவுனம் காப்பதால், பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இனியும் திமுக அரசும், காவல் துறையும் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் நிலைமை விபரீதமாகிவிடும். சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதுதான் மாநில அரசின் முதல் கடமை. வாக்கு வங்கி அரசியலுக்காக, அடிப்படைவாதிகளின் வெறியாட்டத்தை அனுமதிக்கக் கூடாது.

பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்யாத காவல்துறை, அதற்கு எதிராக வன்முறை கலாசாரத்திற்கு எதிராக குரல் கொடுத்த இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்வதுடன், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

தேசபக்தி திரைப்படத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அடிப்படைவாதிகள் செயல்படுவதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory