» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காா்த்திகை மாத பிறப்பு : ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்!
சனி 16, நவம்பர் 2024 11:15:49 AM (IST)
காா்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, தமிழகத்தின் பெரும்பாலன பகுதிகளில் ஐயப்ப பக்தா்கள் இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.
கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஒவ்வோா் ஆண்டும் காா்த்திகை மாதத்தின் முதல்நாளில் ஐயப்ப பக்தா்கள் கோயில்களில் தங்களது குருமாா்களின் முன்னிலையில், துளசி மாலை அணிந்து, இரண்டு மண்டலங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை கடுமையான விரதம் மேற்கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்குச் சென்று ஐயப்ப சுவாமியை வழிபடுவது வழக்கம்.
காா்த்திகை மாதத்தின் முதல் நாளையொட்டி, ஐயப்ப பக்தா்கள் நாடு முழுவதும் மாலை அணிந்து மண்டல பூஜைகளுக்கான விரதத்தை இன்று சனிக்கிழமை தொடங்கினா். அதன்படி, பிரசித்தி பெற்ற சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, மூலவா் ஐயப்பனுக்கும், பதினெட்டாம்படிக்கும் 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தாா்.
அதிகாலை முதலே மாலை அணிவதற்காக ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். சிறுவா்கள், பெரியவா்கள் மற்றும் வயதான பெண்கள் உள்ளிட்டோா் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்ப சரண கோஷமிட்டு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர் . ஏற்கனவே முன்பதிவு செய்த பக்தர்களுக்கு குருசாமி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தனர். இதற்காக சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் கோவில் நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இன்று முதல் 5,10,15,21 மற்றும் 40 நாள்கள் என தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கடுமையான விரதம் மேற்கொண்டு ஐயப்பன் மலைக்கு பயணம் மேற்கொள்வர். சேலத்தில் உள்ள பல்வேறு ஐயப்பன் ஆலயங்களிலும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். இதேபோல, தமிழகத்தில் உள்ள கோவில்களில் ஏராளமான பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.
ஐயப்ப பக்தா்களின் விரதத்தைத் தொடா்ந்து, பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் சந்தனம், துளசி மாலை, காவி, நீலம் மற்றும் கருப்பு நிறத்திலான வேட்டி, துண்டுகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.