» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தாயை தேடி சாலைக்கு வந்த குட்டி யானை: வாகனங்களை மறித்து பாசப்போராட்டம்
ஞாயிறு 10, நவம்பர் 2024 9:28:12 AM (IST)
வயநாட்டில் தாயைப் பிரிந்து சாலையில் வந்த குட்டியானை வாகனங்களை வழிமறித்து பாசப்போராட்டம் நடத்திய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகாவிற்கு உட்பட்ட தோல்பட்டி பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டு யானைகள், கரடிகள், காட்டெருமைகள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் தோல்பட்டி வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை ஒன்று நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் அங்குள்ள திருநெல்லி சாலையில் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்து தவித்து கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக வாகனங்கள் வந்து கொண்டு இருந்தன. அந்த வாகனங்களை பார்த்ததும் தனது தாய் வருவதாக நினைத்து ஓடிச்சென்று மறித்து அவற்றின் அருகில் உரசியவாறு நின்று கொண்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் குட்டி யானையின் பாதுகாப்பு கருதி தங்களது வாகனங்களை மெதுவாக இயக்கினர்.
ஒவ்வொரு வாகனத்துக்கு அருகிலும் ஓடிச்சென்று நின்று அந்த குட்டி யானை பாசப்போராட்டம் நடத்தியது நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது. இந்த யானை குட்டி பாசப்போராட்டம் நடத்திய காட்சிகள் சமூக வலைதளத்திலும் வைரலானது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அந்த இடத்துக்கு மானந்தவாடி வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் குட்டி யானையை மீட்டு தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: தாயை பிரிந்து சுற்றித்திரிந்தது பிறந்து 3 மாதமே ஆன குட்டி யானை ஆகும். அந்த குட்டியானை எப்படி தாயை பிரிந்தது என்பது தெரியவில்லை. தாயை தேடி அங்கும், இங்கும் சுற்றித்திரிகிறது. அதனால்தான் சாலையில் வந்த வாகனங்களை தனது தாய் என நினைத்து நெருங்கியுள்ளது. அந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.