» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

திங்கள் 21, அக்டோபர் 2024 10:55:47 AM (IST)

இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை. விருப்பப்பட்ட மொழியையும் கற்றுக் கொள்ளலாம் என்பதுதான் மும்மொழிக் கொள்கை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே பா.ஜ.க.வின் அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு ஆட்டோ ஸ்டாண்டு உள்ளது. இங்கு 8-வது ஆண்டு ஆயுத பூஜை விழா நேற்று காலை கொண்டாடப்பட்டது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு 60 ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க. மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழக மக்கள் ஆன்மிகத்தின் பக்கமும், தேசியத்தின் பக்கமும் இருக்கிறார்கள். கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட விழாவை சர்ச்சையாக்க வேண்டும் என்பதே தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் திட்டம். ஆனால், தி.மு.க. சொல்லும் பிரிவினைவாத அரசியலை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

தமிழின் பெருமையை உலகெங்கும் பிரதமர் மோடி பேசி வருகிறார். உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையத்தையும் தொடங்கி வைத்துள்ளார். திருக்குறளை 35 வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்க செய்துள்ளார். பா.ஜ.க. தமிழுக்கு எதிரான கட்சி என்பது போன்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அது மக்கள் மத்தியில் எடுபடாது. மொழி அரசியலை விட்டுவிட்டு தி.மு.க. ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட வேண்டும்.

தி.மு.க.வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அந்த பள்ளிகளை மூட தயாரா?. அங்கு கிடைக்கும் வசதிகள் மெட்ரிக் பள்ளி மற்றும் அரசு பள்ளிகளில் கிடைக்காமல் இருப்பது ஏன்?. இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை. விருப்பப்பட்ட மொழியையும் கற்றுக் கொள்ளலாம் என்பதுதான் மும்மொழிக் கொள்கை. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory