» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீபாவளி பண்டிகை நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!

திங்கள் 21, அக்டோபர் 2024 9:02:36 AM (IST)

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நாளன்று பட்டாசு வெடிக்க 5-வது ஆண்டாக கட்டுப்பாடு நீடிக்கிறது. இதன்படி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் வருகிற 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருடைய நினைவுக்கும் வருவது புத்தாடை, இனிப்பு, பட்டாசு தான். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பண்டிகையில் அது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இருப்பினும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பட்டாசு வெடிக்க ஏதுவாக, சுப்ரீம் கோர்ட்டு சில கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதித்தது. அதன் அடிப்படையில், பட்டாசு வெடிக்க அந்தந்த மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரக்கட்டுப்பாடுகள், பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எவை?, தவிர்க்க வேண்டியவைகள் எவை? என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பட்டாசுகளை வெடிப்பதால், நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைகோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளை விதித்தது.

மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், திறந்தவெளியில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியிருக்கிறது.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, அந்த 2 மணி நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல், சீர்கேடு குறித்தும், உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பள்ளிக்கல்வி, உயர்கல்வி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி., அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குனர், மாநகராட்சி கமிஷனர்கள், உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி, நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

ஆகவே பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

MakkalOct 21, 2024 - 11:39:41 AM | Posted IP 162.1*****

Diwalikku kudikaranga tholla thaanga mudiyala Enave liquor 2 Hrs only allow panna vendum

MakkalOct 21, 2024 - 11:36:31 AM | Posted IP 172.7*****

Athe maathiri mathu virka 2 Hrs mattum thaan allowed panna vendum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory