» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருத்துவர்களின் தமிழ்ப் பணி பாராட்டத்தக்கது : அமைச்சா் பெ.கீதாஜீவன் பேச்சு

திங்கள் 21, அக்டோபர் 2024 8:53:08 AM (IST)



மருத்துவர்களின் தமிழ்ப் பணி பாராட்டத்தக்கது என தூத்துக்குடியில்  முட நீக்கியல் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு முட நீக்கியல் சங்கம், நெல்லை முட நீக்கியல் மன்றம் ஆகியவற்றின் சார்பில் தனியார் கூட்டரங்கில் தமிழ் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு தமிழ்நாடு முட நீக்கியல் சங்க மாநிலத் தலைவர் தீன் முகமது இஸ்மாயில் தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் (தேர்வு) மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மருத்துவர் நீலகண்டன் எழுதிய ‘தூங்காத இரவுகள்’, மருத்துவர் ஜெ.சி.கணேசன் எழுதிய ‘எலும்பு துகள்’ ஆகிய நூல்களையும், அதைத் தொடர்ந்து, மருத்துவ தமிழ் கலைச்சொற்கள் அடங்கிய ‘முத்துச்சரம்’ என்ற விழா மலரையும் வெளியிட்டு பேசியதாவது:

மருத்துவத்துறையினர் இரண்டாவது ஆண்டாக தமிழ் கருத்தரங்கு நடத்துவது, அவர்கள் தமிழ் மீது கொண்டுள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. இது, தமிழ் பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கக் கூடியதாக உள்ளது. மருத்துவத்துறையில் உள்ள கலைச் சொற்களை ‘முத்துச்சரம்’ என்ற அகராதி மூலம் தமிழில் வெளிக்கொண்டுவந்ததன் மூலம், மருத்துவச் சொற்களை பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

இந்த அகராதிக்கு, அரசின் அங்கீகாரம் கிடைக்க துணை நிற்பேன். மொழி வளர்ச்சி பெறவும், அதோடு இணைந்து தமிழர்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கோடு அரசு செயல்பட்டு வருகிறது.

மருத்துவமும், கல்வியும் இரண்டு கண்கள் என தமிழக முதல்வர் கூறுவார். அதை மெய்ப்பிக்கும் வகையில், கல்வியும், மருத்துவமும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. மருத்துவப் பணியுடன் தமிழ்ப்பணியையும் மேற்கொண்டு வரும் மருத்துவர்களின் உழைப்பு பாராட்டத்தக்கது என்றார்.

இக்கருத்தரங்கில், மருத்துவர் அறிவியல் உறைகள், பயிலரங்கங்கள், ‘இன்றைய சூழ்நிலையில் மருத்துவப் பணி சவாலை, சந்தோஷமே’ என்றத் தலைப்பில் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன. இதில், மாநிலச் செயலர் திருநாராயணன், இணைச் செயலர் மாரிமுத்து, நெல்லை முட நீக்கியல் மன்றத் தலைவர் ஐவன் சாமுவேல் தேவக்குமார், செயலர் தாமோதரன், பொருளாளர் அசாரியா ஹெர்பட், செயற்குழு உறுப்பினர் பால கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory