» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கவிஞர் மு.மேத்தா, பாடகி பி. சுசீலாவுக்கு விருது : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

வெள்ளி 4, அக்டோபர் 2024 4:01:05 PM (IST)



முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 4) தலைமைச் செயலகத்தில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது'களை கவிஞர் மு. மேத்தாவுக்கும், பின்னணிப் பாடகி பி. சுசீலாவுக்கும் வழங்கிச் சிறப்பித்தார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மாதம் 3-ஆம் தேதி வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துகின்ற வகையில், முதல்வரின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும்பொருட்டு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரையின்படி 2022-ஆம் ஆண்டிற்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட திரைப்படத்துறையில் சுமார் 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ்பெற்ற ஆரூர்தாஸ் அவர்களுக்கு கடந்த 3.6.2022 அன்று விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது'டன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு பெண் திரைக் கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதல்வர் 11.07.2024 அன்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, திரையுலகில் 20,000-க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், "தென்னிந்தியாவின் இசைக்குயில்” என்றும், "மெல்லிசை அரசி” என்றும் பாராட்டப்பட்டவருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கும், தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் மு.மேத்தாவுக்கும், 2023-ஆம் ஆண்டிற்கான 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது'கள் வழங்கப்படும் என்று முதல்வர் 24.9.2024 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பின்படி, இன்று கவிஞர் மு. மேத்தா, பின்னணி பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு 2023-ஆம் ஆண்டிற்கான விருதுடன் தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், நினைவுப் பரிசும் வழங்கிச் சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம்,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன்,  செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.விருது பெறுவதற்கு முன்னர் பாடகி பி. சுசீலா, முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் நீண்ட நேரம் பேசினார். பின்னர் முதல்வர் முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory