» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அலை வீசி வருகிறது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
புதன் 3, ஏப்ரல் 2024 3:31:52 PM (IST)
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் மேல் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, அ.தி.மு.க.வின் அலை வீசுகிறது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையத்தில் அ.தி.மு.க. தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து பேசியதாவது,
தமிழகத்தில் தி.மு.க.வின் மெத்தன போக்கால் நெசவு தொழில் முழுவதும் முடங்கி தறிகள் பழைய இரும்பு கடைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகி விட்டது. தமிழகத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கில் அ.தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் மேல் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வின் அலை வீசுகிறது. இதனால் தி.மு.க.வில் போதிய வேட்பாளர்கள் கூட இல்லாமல் அ.தி.மு.க.வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களே .சேலம், கோவை போன்ற நகரங்களில் தி.மு.க. வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள். அதேபோல் அ.தி.மு.க.வில் இருந்து சென்ற 8 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
அ.தி.மு.க. தொண்டர்களின் வியர்வையால் அடையாளம் காணப்பட்டு தற்போது சேலம், கோவை, தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். எடப்பாடி அ.தி.மு.க.வின் கோட்டை, இங்கு யாராலும் வெற்றி பெற முடியாது.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராகிய என்னை 94 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வைத்து தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது போல் தற்போது அதைவிட கூட கூடுதலான வாக்குகளை சேலம் அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசுக்கு அளிக்க வேண்டும்.என தெரிவித்தார்.