» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேங்காப்பட்டணம், குளச்சல் கடற்கரை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் ஆய்வு!

திங்கள் 8, ஜூன் 2026 8:41:33 PM (IST)



தேங்காப்பட்டணம், குளச்சல் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் அவர்களும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் அவர்களும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தலைமையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.116 கோடி மதிப்பில் பிரதான அலைதடுப்பு சுவர் 282 மீட்டர் நீளத்தில் நீட்டிப்பு பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியானது தற்போது 85 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் தற்போது 540 மீட்டர் பிரதான அலை தடுப்புச்சுவர், 230 மீட்டர் துணை அலை தடுப்புச்சுவர், மீன்ஏலக்கூடங்கள், படகணையும் தளம், அலுவலகம், தொலை தொடர்பு அலுவலகம், உணவகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளோடு செயல்பட்டு வருகிறது. தற்போது 300க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் இருந்த போதிலும் இடநெருக்கடி காரணமாக 126 மீன்பிடி விசைப்படகுகள் மட்டுமே குளச்சல் துறைமுகத்தில் தங்குதளமாக கொண்டு செயல்படமுடிகிறது. ஏனைய மீன்பிடி விசைப்படகுகள் அனைத்து அண்டைய மாநில மீன்பிடி துறைமுகங்களில் தங்குதளமாக செயல்பட்டு வருகிறது.

எனவே குளச்சல் மீனவமக்களின் கோரிக்கையினை ஏற்று, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.150 கோடி மதிப்பில் மீன்பிடித்துறைமுகத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியை அதிகரிக்கும் வண்ணம் பிராதன அலை தடுப்புச்சுவர் 295 மீட்டர் நீளத்திற்கு நீட்டிப்பு பணி, துணை அலைத்தடுப்பு சுவர் 167 மீட்டர் நீளத்திற்கும் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் மண்டைக்காடு மீனவகிராமத்தில் கட்டமைப்பில் ஆறு நேர்கல் சுவர்கள் உள்ளன. மூன்று நேர்கல் சுவர்கள் 2018-ஆம் ஆண்டிலும், மீதமுள்ளவை 2019-ஆம் ஆண்டிலும் கட்டப்பட்டன. ஒவ்வொரு நேர்கல் சுவர்கள் 100 மீட்டர் நீளமும், 150 மீட்டர் இடைவெளியிலும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, மணல் படிந்து 800 மீட்டர் நீளமுள்ள கடற்கரை உருவாகியுள்ளது. 

இந்த நிலைமையால், கரைக்கு அருகில் நீரின் ஆழம் பெருமளவில் அதிகரித்துள்ளது. 1-க்கு 25 என்ற சரிவில் நீரின் ஆழம் 5 மீட்டர் வரை உள்ளது. ஆழமான நீரில் தங்களது படகுகளைக் கரைக்குக் கொண்டுவர முடியாததால், இந்த நிலைமை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கிராமத்திற்கு மீன் இறக்குமிடம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, மண்டைக்காட்டில் உள்ள மீன் இறங்குதளத்தை மேம்படுத்துவது அவசியமாகிறது. 

அதனடிப்படையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.98 கோடி மதிப்பில் நேர்கல் சுவர் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடைபெற்று வரும் பணிகளின் தன்மை குறித்து, துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து மேலகடியப்பட்டினம் மீன்பிடி கிராமத்தில் ஏற்கனவே 165 மீட்டர் நீளத்திற்கு நேர்கல் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. 

இக்கட்டமைப்பு படகுகள் பாதுகாப்பாக இயக்குவதற்கு போதுமானதாக இல்லை. எனவே மீனவ மக்களின் கோரிக்கையினை ஏற்று மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19.64 கோடி மதிப்பில் 125 மீட்டர் நீளத்திற்கு நேர்கல் சுவர் நீட்டித்தல் மற்றும் 167 மீட்டர் நிளத்திற்கு கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று, தற்போது முடிவடைந்துள்ளது. 

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி அன்னை நகர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற மீனவ மக்களின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு, ரூ.19.05 கோடி மதிப்பில் 210 மீட்டர் நீளத்திற்கு அலை தடுப்பு சுவரும், 80 மீட்டர் நீளத்திற்கு நேர்கல் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பணியின் தன்மை குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. தற்போது 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் பள்ளம்துறை மீனவ கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் 185 மீட்டர் நீளத்தில் தூண்டில் வளைவு நீடித்தல் பணி, வலை பின்னும் கூடம் அமைக்கும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட தூண்டில் வளைவு பணி அமைக்க திட்ட மதிப்பீடு சமர்பிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

நடைபெற்ற ஆய்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் விஜய கார்திகேயன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் தாரகை கத்பர்ட் கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கோபிநாத், உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, மீன்வளத்துறை செயற்பொறியாளர் பிரேமலதா, உதவி இயக்குநர் தீபா, விர்ஜில் கிராஸ், உதவி பொறியாளர்கள், துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory