» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் விஜய் அரசு தீர்வு காணும்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் உறுதி!

திங்கள் 8, ஜூன் 2026 5:27:22 PM (IST)



தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு தீர்வு காணும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் கூறினார். 

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மேற்கு கடற்கரை மீனவர்களுக்கு மீன்பிடித்தடைக்கால நிவாரண உதவித்தொகை வழங்குதல் மற்றும் மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (08.06.2026)மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தலைமையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் மரு.விஜய கார்திகேயன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆஸ்டின் (நாகர்கோவில்), ந.தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி), முனைவர் தாரகை கத்பர்ட் (குளச்சல்), ஆர்.செல்லசாமி (பத்மநாபபுரம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் கலந்துகொண்டு, மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்-
தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பட்ட மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் தனிக்கவனம் செலுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதோடு, அமைச்சர்கள் நேரடியாக களஆய்வு மேற்கொண்டு, மக்கள் பிரச்சினைகளை உள்வாங்கி தீர்வுகளை காண்கின்றனர். அதனடிப்படையில் இன்றைய தினம் நம்முடைய மாவட்டத்திற்கு மதிப்புக்குரிய மீனவர் நலத்துறை அமைச்சர் மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அக்கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் வந்திருக்கின்றார்கள்.

மேலும் நமது மாவட்டத்தை பொறுத்தவரை நீரோடியில் இருந்து ஆரோக்கியபுரம் வரை 42 மீனவ கிராமங்களை சேர்ந்த பங்குதந்தையர்கள், மீனவமக்கள், மீனவ பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் தூண்டில் வளைவு சேதம், கடல் அரிப்பு பிரச்சினை, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் வீடுகள் கடலில் இழுத்து செல்லப்படுகின்றன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். 

கடந்த காலங்களில் மீனவர்கள் இதுபோன்ற பிரச்சனையை சந்தித்தும் உள்ளார்கள். அவர்களுக்கு அரசு சார்பாக வீடுகளைக் கட்டித் கொடுக்க வேண்டும். இறந்த மீனவர்களுக்கு இறப்பு சான்று வழங்குவதில் காலதாமதம் ஆவதை தவிர்க்க வேண்டும். மீன்வளத்துறை அமைச்சர் இங்குள்ள மீனவர்களின் பிரச்சினைகளை முதல்-அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவிக்கும் பட்ஜெட்டில் மீனவர்களுக்கு வாழ்வாதாரம் மேம்பட வேண்டும். 

இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனவர்களுக்கு மீன்பிடித்தடைக்கால நிவாரண உதவித்தொகை வழங்கியதோடு, 20 மீனவர்களுக்கு நாட்டுப்படகு வெளிப்பொருத்தும் இயந்திரம் ரூ.12.92 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. மீன்பிடி உபகரணங்கள் 40 சதவீத மானிய விலையில் 6 மீனவர்களுக்கு ரூ.1.17 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. மீன்பிடிக்கையில் மரணமடைந்த மீனவ குடும்பத்திற்கு ரூ.2.00 இலட்சம் வழங்கப்படுகிறது. இயற்கை மரணமடைந்த மீனவ குடும்பத்திற்கு ரூ.27,500 வழங்கப்படுகிறது. மீனவ குடும்பங்களுக்கு கல்வி நிதியாக ரூ.1,500 உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடலோர மக்களின் அனைத்து கோரிக்கைகளுக்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் கலந்துகொண்டு, மீனவர்களுக்கு மீன்பிடித்தடைகால நிவாரணம் வழங்கி பேசுகையில்- தமிழ்நாடு முதலமைச்சர் மீனவ பெருமக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையில் ஆழ்கடல் மீன்பிடித்தலை நவீனப்படுத்தவும் கடற்பாசி வளர்ப்பை ஊக்கப்படுத்தவும், கடல் சுற்றுலாவை மேம்படுத்தவும், கடல் உணவுகளை பதப்படுத்தி விற்பனை செய்யவும் கடல் அலை மற்றும் காற்று மின்சாரம் தயாரிக்கவும் கன்னியாகுமரி - இராமேஸ்வரம் கடலோர பகுதிகள் நீலப்பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். இந்நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். 
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மீனவப்பெருமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. அதில் முதற்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித்தடைக்கால நிவாரண உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
மாநிலத்திலேயே கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அதிக அளவில் மீன்பிடித்தொழில் ஈடுபடுகின்றனர். இம்மாவட்டம் 71.5 கி.மீ கடற்கரை பகுதியை கொண்டதாகும். இதில் 42 மீனவ கிராமங்கள் சுமார் 1.43 இலட்சம் மீனவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆழ்கடலில் மீன்பிடிப்பின் போது மீனவர்களை தொடர்பு கொள்ள ஏதுவாக தொலைத்தொடர்பு கருவிகளாகிய Satellite Phone, Transponder, VHF உள்ளிட்ட கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்திடவே நான் இங்கே வந்துள்ளேன். இன்று இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவ மக்களுக்கு ரூ.21.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டு மீன்பிடி தடை காலத்தினை 61 நாட்கள் பின்வருமாறு கடைபிடித்திடவும். பாரம்பரிய மீன்பிடிகலன்கள் நீங்கலாக விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடை விதித்திடவும் அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கிழக்குக் கடற்கரை மீன்பிடி தடைக்காலமானது. திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் (கன்னியாகுமரி நகரம்) வரை, ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை மீன்பிடி தடைகாலமானது, கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி முதல் நீரோடி மீனவ கிராமம் வரை, ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில் நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 27,250 மீனவ குடும்பங்கள் தடைக்கால நிவாரணமாக தலா ரூ.8000 வழங்கப்படுகிறது. மேலும் மீனவ பிரச்சனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு தீர்வு காணும். இவ்வாறு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பேசினார். 

நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) .மேரி பிரின்சி லதா, கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கோபிநாத், உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன், மீன்வளத்துறை செயற்பொறியாளர் .பிரேமலதா, உதவி இயக்குநர் .தீபா, .விர்ஜில் கிராஸ், உதவி பொறியாளர்கள், துறை அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory