» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அதிமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும் : கடம்பூர் செ. ராஜு நம்பிக்கை!

ஞாயிறு 3, மே 2026 9:31:37 AM (IST)

அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளருமான கடம்பூர் செ. ராஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4, திங்கள்கிழமை) நடைபெற உள்ள நிலையில், கோவில்பட்டி தொகுதி அதிமுக வாக்கு எண்ணும் மைய முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கடம்பூர் செ. ராஜு, முகவர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். அதிமுக மட்டுமே தனியாக 140 முதல் 170 தொகுதிகள் வரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணியில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றினோம். ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தாமதமாகவே இணைந்ததால், அவர்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லை.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பின்னர் அரசியலுக்கு வந்த நடிகர்கள் யாராலும் வெற்றி பெற முடியவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து நாளை தெரியவரும். கோவில்பட்டி தொகுதியில் நான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எஸ்.ஐ.ஆர் திட்டத்தை அரசியலாக்கி எதிர்த்தவர்கள் தற்போது யதார்த்த நிலையைப் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory